சனி, 20 பிப்ரவரி, 2016

போராளிக்கு மட்டும் தான் மானம் உண்டா பொது மகளுக்கு இல்லையா ???????

கலாச்சாரத்தை பாதுகாக்க முடியாத எழுத்துலகம் யாருக்கு வேணும் ...உங்கள் கழிவுகளை விற்க மக்கள் வேணும் ஆனால் நீங்கள் மக்களை கண்டுக்க மாட்டீர்கள் பிரபலங்களும் பிரபலங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமும் சிந்திக்கவேணும் இனியாவது ..
‪#‎இசைப்பிரியாக்கு‬ உலக நீதி கேட்பவர்கள் முதலில்‪#‎வித்தியாக்கும்‬ ‪#‎ஹரிஸ்ணவிக்கும்‬ உள்ளூரில் நீதியை தேடுவார்களா ....
ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் ,இலக்கியவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் ஒரு சமூகம் சார்த்து சிந்திக்க வேண்டியவர்கள் ,அந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிர் குரல் எழுப்பவேண்டியவர்கள்,கண்டனங்களை பதிவு செய்வதும் முறையிடுவதும், சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கொண்டுபோவதுமாக இந்த எழுத்துலகம் இயங்க வேண்டியது ,ஒருகாலத்தில் அப்படித்தான் இயங்கியது எனலாம் .....
ஆனால் இப்பொழுது எல்லாம் ஆளாளுக்கு இலக்கிய சங்கங்களும் ,வட்டம் சதுரம் என இலக்கிய குழுக்களும் தாம் சார்த்த தங்களை சாரும் நபர்களுக்கு பஜனை பாடவே தங்களின் முழு நேரத்தையும் செலவழிப்பதும் ,எவன் காலை பிடித்தாவது பெயர் பெற துடிப்பதும் அதற்காக அம்மணமாக நிற்க கூட துணிவதுமாக மிக அநாகரிகமான மீன்சந்தை வியாபாரமாக மாறி இருக்கிறது இந்த எழுத்துலகம் ........
அதிலும் ஈழ இலக்கியவாதிகள் இந்தியாவில் ஒரு தலித் பெண்ணுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டது போல துடித்து எழுவதும்,கூட்டறிக்கை ,இலக்கியவாதிகள் கையொப்ப மனு என அவர்கள் செய்யு அழும்புக்கு அளவே இருக்காது ஏனெனில் தமிழ்நாடு என்னும் பெரும் சந்தியில் சிறு கீரை விற்க இவைகள் இவர்களுக்கு அவசியம் ஆகிறது .....
அதிலும் ஈழத்தில் இருக்கும் இலக்கிய காளான்கள் மாதம் நாலு முறையாவது இலக்கிய சந்திப்பு நடத்துவதும், அதில் பெண்கள் கலந்துகொள்ளவில்லை என கவலைப்படுவதுமாக இருக்கு ஒரு சில குறுப்புக்கள், இந்த சமூகம் சார்த்து சிந்திப்பதே இல்லை அதற்காக ஒருநாளும் பேசியதும் இல்லை குரல் எழுப்பியதும் இல்லை, எங்காவது பிரபலம் கிடைக்கும் என்றால் அங்கு போய் நின்று படத்துக்கு போஸ் கொடுப்பதும் ,செல்பி எடுத்து போடுவதும் அத்துடன் முடிந்துவிடும் போராட்டம் .....
ஆக இணையங்களில் நாடுபிடிக்கும் போராளிகளும் தமிழ்தேசிய அதி உச்ச விசுவாசிகளும் ,தங்களை புரட்சியாளர்கள் என காட்டுவதற்காக அடிக்கடி படங்களை மாற்றி வீரவணக்கம் போடுவதும்,தளபதிகளின் படங்களை போட்டு கதை சொல்வதுமாக அவர்களின் பொழுது போகிறது ....
ஆக ஈழ எழுத்தாளர்கள் என அறியப்படும் பலர் ஒரு இனம், அந்த சமூகம் பட்ட அவலங்களை எப்படியாவது விபரித்து கதை எழுதி ,அதை எங்காவது ஓடி ஓடி விற்று தங்களின் பிழைப்பையும் , இருப்பையும் தக்கவைக்க எடுக்கும் முயற்சியில், ஒரு துரும்பாவது சமூகம் சார்த்து ஓர் சீரழிவு ,பெண்கள் மீதான வன்முறை ,என்பவற்றுக்கு குரல் கொடுப்பதில்லை ,இசைப்பிரியாக்கு காட்டுகூச்சல் போடும் இந்த அடிப்படை அறம் பிழைத்த நியாவதிகள் வித்தியாவும் , ஹரிஸ்ணவியும் கண்களுக்கு தெரிவதில்லை .........
ஆக எமக்கு இசைப்பிரியா மட்டுமே ஈழபெண்ணாகவும் பாலியல் வல்லுறவுக்கு ஆள்பட்ட பெண்ணாகவும் தெரிவதால், எம் சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் பெண்களாக தெரிவதில்லை சிங்களவன் செய்வது மட்டுமே பாலியல் வன்புணர்வு இதை தமிழர் செய்தால் அதை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் மனநிலையில் நாம் வாழ்கிறோமா .......
என் வீட்டுக்கு வராதவரை நாம் மௌனமாக இருக்கலாம் ,அது தீவிலையாம் இது வவுனியா காட்டிலையாம் என பேசிவிட்டு கடந்து போவோம் ஒருநாள் உங்கள் முற்றத்தில் உங்கள் சகோதரி சீரழிந்து கிடப்பாள் அப்பொழுதாவது உங்களுக்கு பேசுவதற்கு எழுதுவதற்கு முனைப்பு வருகிறதா என பார்க்கலாம் அதுவரை வேடிக்கை பார்ப்போம்.

புதன், 17 பிப்ரவரி, 2016

இப்ப துரோகிகள் அப்ப ஹிரோக்கள்.

இளையராஜாவின்  தரை தப்பட்டை  இசை  போல கூவி  செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும்  இடம் எல்லாம் பழைய தும்பு  தடிகள் போல தும்பு  எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி  இருந்தது ....

நாலு நிலைகளு  உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி  லெப்டினன் கேணல்  காதம்பரி  தலைமையில் அதை  எதிர்கொண்டு இருந்தது,நிலைகள்  உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை  பேசிக்கொண்டு  இருந்தது ...

பப்பா லையினில்  அடிவிளுகுதாம் எக்கோ  பக்கம்  உள்ளவர்கள்  உடனம்  பக்கவாடாக  சப்போட்  கொடுக்கசொல்லி கட்டளை  வருகிறது,வோக்கியை கையில் ஏந்தியபடி  தனது கோல் கொமாண்டோ ரைபிளை  தூக்கி  பெடியள் வேகம் வேகம் என்கிறார் தீபக் மாஸ்டர்,பிள்ளைகள்  மாட்டிட்டு  அடிச்சு  எடுங்கோ  வெளியில் என மாறி  மாறி மேஜர்  சுஜாத், ஜெனாவின்  செக்சனுக்கு சொல்லிக்கொண்டு  சண்டை  நடக்கும்  இடம்  நோக்கி குனித்த படியே மூன்றும் மையில் ஓடும்  நிலை,கொஞ்சம்  நிமித்தாலும் எங்காவது  வெடி  கொழுவும் என்னும் பயம் எல்லோரு மனங்களிலும்  ஓடியபடி இருக்கிறது .....

முன்னாடி  போன  அணி சண்டையில்  பின்  வளங்கள்  இல்லாமல் போக சண்டை  தளர்வு நிலைக்கு  வருகிறது அது  எதிரிக்கு  வாய்பை  கொடுக்கிறது,  வேவுக்காரர் வருகிறார்கள்  நிண்டு  பிடியுங்க சப்போட்  வந்து  சேர்த்திடும்  என  அவர்களுக்கு  தைரியம்  கொடுத்தபடி,  உள்  நுழைகிறது  தீபக் மாஸ்டர்  அணி நிலை  எடுங்க  அவசரம்  வேணாம் வளங்கள்  வரும்வரை  தக்க வைக்கணும் என்னும்  நிலையில் களம் இருக்கிறது....

ஒரு வி  வடிவில்  நாலு  காவல்  அரணையும் எதிரி  தனது  கட்டுப்பாடில்  கொண்டுவந்தான், இங்கிருத்து  அங்கால  கடக்க முடியாது மற்ற பக்கம்  உள்ளவர்கள்  இந்த  பக்கம் நகர  முடியாமல்  ஆறு  குறுக்கே  இருந்தது , ஒன்றில் இந்த பக்கம்  உடைச்சால்  மட்டுமே  அவர்களுடன்   தொடர்பை  ஏற்படுத்த  முடியும் அல்லது  தனிப்படும்  இங்குள்ள  நிலைகள்  வளங்கள்  வருவது கடினம் என்னும்  நிலை மதியம் நெருங்க  சோர்பு களைப்பு  பசி  என  ஒரு  மந்தமான  சூழல்  நிலவுகிறது அந்த  பதட்டம் பொறுப்பாளர்கள்  கண்களில்  தெரிகிறது சும்மா  அடிக்க   வேணாம்  ரவுஸ்  முடிக்க  வேணாம் உதவி  வரும்வரை  தாக்கு  பிடியுங்க  ......

ஒகே ஆக்கள்  கிட்ட  வந்திட்டாங்கள்  இப்ப  வந்திடுவாங்கள்  ஒகே  ஒகே  என  வோக்கியின்  ஒலியில் தெரிகிறது நம்பிக்கை ,தலையில் கறுப்பு துணி  (முறால் துணி) என்பர் கைகளில் பவரான ஆயுதங்கள் ஒன்பது பெயரில்  மூன்று  பேர்  இடம் எல் ம் ஜி  இருந்தது  அணியை  கூட்டி  வந்த பொறுப்பு  கட்டளை  இடுகிறான் பொடியள் அங்கிட்டு  போட்டு  உசக்க  அடி ,டேய் நீங்க  மருக்கா போட்டு  கொடுங்க சப்போர்ட்  இவனுக கொடுப்பாங்க என பரபரப்பாக  பேசும்  போது  தெரிகிறது அவரின்  பேச்சு  மொழியில் மட்டக்கிளப்பு ஜெயந்தன்  அணி  என ....

நம்ம  ஆக்கள்  செல்  போட்டு  கொடுப்பங்க  பின்னேரத்துக்குள் சண்டை  தொடங்கி மீண்டும் நாலு  நிலையும்  பிடிக்க வேணும் ,மீண்டும் தொடங்கியது பெரும் சமர் எதிரியின் மிக  அதீத  சூட்டு வலுவை  எதிர்த்து  இரண்டு  அணிகளாக  உள்   போகிறது போராளிகள் அணி அடிச்சு மூடினால் முன்  நிக்கும் தங்கள்  வீர்கள் நிலை  கேள்வி  என  யோசிச்சு  எதிரி  பின்  நகர  தொடங்க போராளிகள் மன  நிலை  உற்சாகம் அடைகிறது ஓடுறான்  அடி அடி  என வேகம் எடுக்கிறது சண்டை ,எல்லாம்  முடிந்து வழமைக்கு திரும்பும் போது பதினாறு போராளிகள் மண்ணை முத்தமிட்டு இருந்தனர் ...

மச்சான்  ஆள் முடிச்சாம்  என சாவை சாதரணமாக  சொல்லிக்கொண்டு காவி போனார்கள்  சக தோழர்கள்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பாசத்தின் விலை.

என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க ,

ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ......

என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்டியது தான் ,இங்க பிரச்சினை என்று வேறு வேலைக்கு போனால் அங்க வேறு பிரச்சினை இருக்கும் சரி விடுங்க இதுகளை கதைச்சா தலை வெடிக்கும் , உண்மைதான்டா தம்பி ஆனால் , ஆனால் என்ன அண்ணே சொல்லுங்க நீங்க எதோ வேற பிரச்சினையை வைச்சு கதைப்பது போல இருக்கு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்க நான் கேட்கமாட்டான் நேரம் ஆகுது வீட்டுக்கு போங்க அக்கா பார்த்துக்கொண்டு இருப்பா ....

உனக்கு சொல்லுறதில என்னடா இருக்கு நீ எனக்கு ஒரு சகோதரம் போல ,இல்லை எங்கட மூத்த அக்காவின் பிள்ளைகளை இவன் தம்பி ரவி தான் இவ்வளவு காலமும் பார்த்தவன் ,

ஓம், ஓம் எனக்கு தெரியும்.... நீங்கதானே அவரை இங்க கூப்பிட்டு விட்டது

ம்ம் அவனும் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில இருந்திட்டு வெளியில வரும்போது வயதி முப்பது தாண்டி போட்டுது ,நானும் எவ்வளவு காலம் பார்க்கிறது பிள்ளைகள் வளர வளர தேவைகள் கூடுது அதனால தான் அவனை கடன்பட்டு கூப்பிட்டு விட்டன் ,வந்தவன் எனக்கு காசு தரவேணாம் நீ மூத்த அக்காவின் பிள்ளைகள் மூன்றையும் வளர்த்து விடு என்று நான் சொல்லி போட்டு விடுட்டுடன் அவனும் சரி அண்ணை என்று இவ்வளவு காலம் பார்த்தவன் ....

கடைசி பெடியன் பிறந்து பத்தாம் நாள் அத்தான் கிபீர் அடிச்சு செத்து போனார் ,அந்த மூன்று பிள்ளையும் அவள் வளர்க்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ,நான் இங்க இருந்து காசு கொடுத்து விட்டாலும் அது போயிட்டா கொடுத்து விட்ட ஆள் கொண்டுபோய் கொடுத்து இருக்குமா என்று எல்லாம் இரவு பகல் எல்லாம் யோசிப்பன் ,உனக்கே தெரியும் அப்ப ஒரு தொடர்பும் இல்லை வன்னிக்கு கதைக்க ...

உண்மைதான் அண்ணே போன் கதைக்க வேணும் என்றால் கூட முதல் இரண்டுநாள் வந்து சொல்லி அதுக்கு பிறகு போய் காத்திருந்து கதைக்க வேணும் ...

ம்ம் அப்படி தான் இருபது வருடத்தில் அக்காவோட இரண்டு தரன் தான் கதைச்சனான் எடா .. சரி அதை விடு ,இப்படி இவனுக்கும் வயது நாற்பது ஆகுது இனி எங்க கலியாணம் என்று அவனுக்கும் வெறுப்பு வந்திட்டு, பிறகு இல்லை கடைசி காலத்தில தனிச்சு போடுவான் என்று நான் தான் பிடிவாதம் பிடிச்சு, கலியாணம் பேசி ஊரில தெரிச்ச பிள்ளை தான் நாலு மாதம் முதல் இந்தியாவில போய் கட்டீட்டு வந்தவன் ..

ஓம் ஓம் ஒருக்கா படம் போனில காட்டின நினைவு இருக்கு இப்ப என்ன அவைக்குள்ள என்னமும் பிரச்சினையா ...

சீ சீ அவள் தங்கமான பிள்ளை ,பிரச்சினை என்ற அக்காவின் பெடி படிச்சவன் இனி குடும்பத்தை பார்ப்பான் ,வளர்த்திட்டான், வேலைக்கு போக தொடங்கிட்டான், என்னும் துணிவில தான் நான் சந்தோஷமா இருந்தான் ,பட்ட துன்பங்கள் துயருகள் எல்லாம் மறத்து, அடுத்தவள் பொம்பிளை பிள்ளை அதை அவன் கரை சேர்ப்பான் என்று இருக்க நேற்று அக்கா போன் பண்ணி அழுகிறா என்ன நடந்தது என்று நான் கலவர பட்டு பயந்து போனேன் ...

ஏன் அண்ணே என்னாச்சு ,ஏதாவது வாகனத்தில் அடிபட்டு போட்டானே பெடியன் ..

கோதாரி அப்படி போய் இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டுருப்பன் அந்த மூதேவி இப்ப தான் இருபத்தி ஒரு வயது அவையின் வீட்டில் இருந்து மூணாவது வீட்டில இருந்த ஒரு பெட்டைய கூட்டிக்கொண்டு ஓடிட்டாம் என்று சொல்லி முடிக்கும் போது .....

இவன் குடும்பத்தை பார்ப்பான் என்று நான் இருக்க ,இவன் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு போயிட்டான் என கண்களில் நீர் அணைக்கட்டில் நிறைவது போல முட்டி நிக்க கதையை சொல்லி முடித்தார்....

யோசிச்சு பார் அப்பு நானும் கடன் ,வந்த தம்பி உழைச்சு கொடுத்து, படிப்பித்து, வீடு கட்டி கொடுத்து,மோட்டார் சைக்கிள் முதல் கொண்டு வாங்கி கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை நாற்பது வயதில் தான் ஆரம்பிக்க போக இந்த நாய் இந்த வேலையை செய்து இருக்கு ...

விரும்புறது கலியாணம் கட்டுறது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சமாவது குடும்பத்தை யோசிச்சு பார்த்தியா ,தங்கச்சி இருக்கு தம்பி இருக்கு படிப்பிக்க வேணும் அம்மா இவ்வளவு காலம் விதைவையாக இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கி விட நாங்க இப்படி தெறிக்கும் வேலையை செய்யலாமா என்று ...

சரி அண்ணே அழவேணாம் அவன் பார்ப்பான் குடும்பத்தை மாமா ஆக்கள் எப்படி கஷ்டபட்டு தன்னை வளர்த்தவர்கள் என்று விளங்காமல் இருக்குமா ,சரி நீங்க அழாமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னும் ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னால் அவருக்கு வேறு என்னத்தை தான் கூற முடியும் .