புதன், 12 அக்டோபர், 2016

விரல் நீட்டுவதை நிறுந்துங்க மேதைகளே.

இலங்கைதீவில் தமிழர்களுக்கான உரிமை சம அந்தஸ் என்பது எல்லாம் இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்னமே பேசத்தொடங்கி போராட தொடங்கி நடந்து வருகிறது என்பது வரலாறு,இது இலங்கை சுகந்திரம் பெற்றபின்னும் சிங்கள பெரும்பான்மை சமூகம் தங்களின் நலனும் நலன் சார்த்தும் எடுத்த முடிவுகளும்,அதற்காக உருவாகிய யாப்பு முறையுமே தொடர்த்து சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைக்கு போராடும் நிலையில் கொண்டு செல்கிறது.

ஆக அதற்கான ஓர் தீர்வினை எட்டி வரும் காலமும் வரும் தலைமுறையும் ஒரு சுபீட்சமான வாழ்விற்கு செல்வதற்கு அடிப்படையில் உள்ள இன முரணின் தோற்றம் களையப்பட்டு நிவர்த்தி செய்யவேண்டிய தேவை தமிழர்களை விட சிங்களவர்களுக்கு தான் அதிகம் இருக்கிறது,எந்நேரமும் ஒரு பதட்டமும் உசார் நிலையம் எவரையும் நம்பாத போக்குடன் சிங்களம் எவ்வளவு காலத்துக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்துட முடியும்,அதன் போக்கை மாற்றும் அல்லது இன்னொரு ஆயுத போருக்கு வழியமைக்க கூடாது என்னும் நிலையில் தான் ஒருகாலமும் சேராது இருந்த இரண்டு பெரும் தேசிய கட்சிகள் உள்பகை,உள் முரண் பாராது மன ரோஷம் எல்லாம் விட்டு ஒன்று சேர்த்து ஆட்சி செய்யும் நிலையும்,அதனூடாக அதிக பெரும்பான்மை பெற்று தாம் நினைத்த,யாப்பு திருத்தம் சட்ட மூலங்களை பாராளுமன்றில் வெற்றி பெற வைக்க முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஆட்சி மாற்றமும் அரசின் இன பிரச்சினைக்கான தீர்வின் ஒரு முன் ஏற்பாடும் ஆக இருக்கிறது.

இவைகள் எல்லாம் கால இழுத்தடிப்பாக இருந்தாலும் கூட வரும்கால இலங்கையின் நலன் கருதி இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை சிங்கள தலைமைகளுக்கு கட்டாயம் என்னும் நிலை இருக்கிறது,அல்லது போனால் உலக வல்லரசுகளின் அதிகார போக்கில் சிக்கிசீரழிந்து இரு இனங்களும் நிம்மதி அற்று வாழும் ஒரு நிலையே உருவாகும்,ஆதலால் தான் ஒற்றை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவந்து சமஸ்டி பற்றி பேசும் அது பற்றி சிங்கள மக்களுக்கு விளக்கும் வேலைகளை மெதுவாக செய்ய தொடங்கி இருக்கிறது சிங்களம் அதன் தலைமைகளும்.

ஆனால் தமிழர்கள் மட்டும் இன்னும் ஆயிரம் வருடங்கள் போனாலும் தங்களுக்குள் இருக்கும் உள் பகை,பழிவாங்கல்,சாதிய பேச்சு என காட்டுவாசிகள் போல உலாவருவது காண முடிகிறது,இங்கு உள்ள பிரச்சினை யாதெனில் நான் மட்டுமே பேசவேண்டும் என்பதும்,நான் மட்டுமே வழிநடத்த வேண்டும் என்பதும்,நான் மட்டுமே தலைவனாக இருக்கு தகுதியுள்ளவன் என்பதும்,நான் மட்டுமே அறிவாளி என்பதும்,நான் மட்டுமே படித்த மேதாவி என்பதுமாக தமிழர்களிடம் காலம் காலம் கடத்தப்படும் ஜீனில் இருந்து தொடர்கிறது இந்த போக்கு.

என்றைக்கும் நாம் எவரையும் குறிப்பாக தமிழ் தலைமைகள் எவரையும் முன்மாதிரியாக கொண்டும்,தலைவர்களை வழிகாட்டியாக கொண்டும் ஒரு லட்சியம் ,கொள்கையில் நின்று போராடியது இல்லை இது தமிழர்களில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் ஆகும்,நான் ஏன் அவருக்கு கீழே நிக்கவேண்டும் என்பதும் என்னைவிட அவர் என்னத்தை பெரியதாக சாதித்தார் என்பதும் தான் இங்குள்ள உளவில் பிரச்சினை எனலாம்.

இன்றும் கூட புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் குற்றவாளிகள் ஆக்கி,பிரபாகரன் வாழ்வே தகுதியற்றவர் என நிறுவி தங்களை அந்த இடத்தில கொண்டுவந்து நிறுத்த பலர் படாத பாடு படுவதை காணலாம்,இதை அவர்கள் கச்சிதமாக செய்து முடித்தாலும் கூட இலங்கை பிரச்சினை தீர்த்து விடுமா என்னும் கேள்வியை அவர்களிடமே விட்டு விடலாம்,எல்லோரும் பிரபாகரனை விமர்சனம் செய்வதும்,சுய ஆய்வுக்கு அவரை உள்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டி நிக்கும் இந்த அறிவாளிகள் தங்களை ,தாங்கள் சுற்றி நிக்கும் கூட்டுக்களை,தங்களை தூக்கி வைத்திருக்கும் கைகளை முதலில் சுயஆய்வுக்கு உள்படுத்த மறுப்பதுதான் விந்தை.

நீங்கள் தமிழ் தேசியத்தை எந்தப்பக்கம் குறுக்க வெட்டினாலும் அங்கு புலிகளும், அதன் தலைமையும் கண்டிப்பாக வந்தே போகும் ஏனெனில் உங்களை விட அவர்களே தமிழர் நலனுக்கு தங்களை தியாகம் செய்து போராடியவர்கள் என்பதை நீங்கள் மறந்தாலும்,வரலாற்றை திரித்தாலும் கூட தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பதால்.
ஒரு இனத்தின் நலனை ஒரு அமைப்பின் நலனாக இருப்பாக பேசுவதை நிறுத்தி,மக்கள் நலன் சார்த்து பயணிக்க வேண்டிய தேவையை உணருங்கள்.


மரணத்தை பேசி.

மணியோசையில் எழுந்த பொழுதும்
குயிலிசையில் மயங்கிய பொழுதும்
சில்வண்டின் ரீங்காரத்தில் உறங்கிய பொழுதும்
சருகுகள் ஊடே எலிகளை கலைக்கும் சாரையும்
உயிர் காக்க அவை எழுப்பும் அபாய ஒலியும்
இன்னும் மண்டையின் ஓர் ஓரத்தில் நினைவில்

கட்டிலும் மெத்தையும் தலையணையும்
ஏற்காத உடல் எப்பவும் வெறும் தரை தேடி
முதுகில் புற்று புட்டி முட்ட நெளிந்து கிடந்து
உறக்கம் தொலைத்த அந்த கணப்பொழுதுகள்
ஏனோ தெரியவில்லை படு சுகமாய் இருந்ததே
உறக்கத்தில் அவன் இறந்தான் என்பது கூட
இப்பொழுதும் கனவாக தான் உள்ளது


நாகம் கடந்திருக்கும் இல்லை இது புடையன்
வெள்ளை பூரான் போட்டு இருக்கும் ..இல்லை
அடையாளம் நட்டுவக்காலி தான் ..இல்லை
ஆள் நீலம் பெரவில்லை விஷமா இருக்காது
பேசி ஒரு முடிவுக்கு வரமுன்னம் வேட்டொலி
விடை இல்லாமலே புதைக்கப்பட்டான் அவன்.

சனி, 24 செப்டம்பர், 2016

ஒரு நினைவு வந்தது.

இந்த படத்தை எதேற்சியாக பார்த்த போது ஒரு நினைவு வந்தது....
                                      தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.


வலிகள் மேல் வன்ம நாக்கால் நக்காதீர்.

                    

எழுதக்கூடாது என பலமுறை எழுதி அழிந்து விட்டு நிம்மதி அற்று உறங்க போயிருக்கிறேன்,காரணம் வேறு ஒன்றும் இல்லை எங்க பல்லை குற்றி நாங்களே ....கூடாது என்பதால்...

ஆனாலும் இன்று அதன் கதையின் வேகமும்,அவர்களின் செயலும், அதன்னூடே எழும் கேலிகள், கிண்டல்கள் ,பேச்சும்,உங்கள் தினவெடுத்த தினாவெட்டுக்களை என் எழுத்து கோல் முனை கொண்டு முறிப்பது அன்றி வேறு ஒன்றும் வழியில்லை எனக்கு....

வித்தியாவின் மரணம் நிகழத்த பின் எழுந்த மனிதாபிமான அலையை ,அதன் உணர்வு பூர்வமான போராட்டங்களை ,அக்குடும்பத்துக்கு உறுதுணையாக நின்ற அனைத்து மக்களும்,நிறுவனங்களும் அமைப்புக்களும்,சமூக ஆவலர்களுக்கும் ,நாம் என்று கடமையுடனே இருக்கிறோம் இருப்போம்....
அதன் இடைவெளில் வித்தியா குடும்பத்துக்கு உதவுறம் என வெளிநாட்டு வாழ் புங்குடுதீவு உறவுகள்,ஒன்றியங்கள் ,சங்கங்கள் வெளிப்படையில் இட்ட அறிக்கைகள் பேச்சுக்கள் பெரும்பாலும் அனைவரும் காதுகள் ஊடாக பாதுகாக்கபட்டது என்பதையும் அனைவரும் அறிவார்கள்....

இவ்வாறன செயல்பாட்டின் அடிப்படையில் கனடா "புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்"ஒரு தொகை நிதியை சேகரித்து இருக்கிறது அது போல் லண்டனில் ஒரு சில தனிநபர்கள் வித்தியாவின் உறவுகள் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,மற்றது சுவிஸில் உள்ள உறவுகளும் சொந்தம் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,ஆனால் இவர்கள் சேகரித்த நிதி வித்தியா குடும்பத்துக்கு கொடுக்கபடவில்லை,இப்ப பிரச்சினை இவர்கள் எமக்கு தரவில்லை என்பது இல்லை இவர்கள் வாங்கிய காசு வித்தியா பெயரை சொல்லி வாங்கியது தான் எமக்கான நெருடல், பிரச்சினை, வேதனை......

வெளிநாட்டில் இருந்து வித்தியா குடும்பத்துக்கு புங்குடுதீவு அமைப்புகளால் கொடுப்பட்ட எனில், அது பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மட்டுமே ஆகும்...http://www.pungudutivu.fr/2015/08/b... தொடுப்பை அழுத்தி தொகையை பார்க்கலாம்,மிகுதி எல்லாம் தாம் கொடுத்தாக சொல்லப்பட்ட செய்திகள் ஆகும்அவர்கள் கொடுத்து இருந்தால் ஆதரங்களுடன் வெளியிடலாம் ஒரு பிரச்சினையும் இல்லை ...

ஆனால் இன்று கண்ணகை அம்மன் கோயில் திருவிழாக்கு கூடி இருக்கும், பெரும்பாலும் வித்தியாவை கொலை செய்த கொலையாளிகளின் அண்ணன் ,தம்பி, மாமன், மச்சான், உறவுகள், என அனைவரும் இன்று அங்குதான் நிக்குறார்கள்,அவர்கள் வித்தியா குடும்பத்துக்கு ஐன்பது அறுபது லட்சம் பணம் வந்ததாகவும் ,அதை வைப்பில் இட்டு வாழ்வதாகவும் (இரண்டு தவணைக்கு சட்டத்தரணி வரவில்லை அது வேறுகதை) அந்த கொலையில் தங்கட உறவுகளுக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் ஒரு தோற்றத்தை புங்குடுதீவில் உருவாக்கி வருகிறார்கள்...

நீங்கள் கொளுத்தும்பாவம், உங்கள் பாவ புண்ணிய கற்பூரம் கண்ணகி உங்கள் குலத்தை ஒருநாள் கொளுத்துவாள் என்னும் நம்பிக்கை எமக்கிருக்கு,பால் சட்டி ,தீ சட்டி எடுத்து உங்கள் யோக்கியங்களை நீங்கள் மூடி மறைந்ததால், ஒருநாள் அது உமியில் இட்ட நெருப்பாக உள்ளால் எரிந்து சாம்பல் ஆக்கும் என்னும் திடம் எம்மிடம் இருக்கிறது...

நா கூசாது நீங்கள் பேச்சும் பேச்சை நிறுத்துங்கள்,திருவிழா முடிந்து போகும் போது வேறு ஒரு வித்தியாவை நீங்கள் சிதைக்காமல் போனாலே பெருநிம்மதி அடைவோம்,ஏனெனில் உங்கள் குணங்கள் வெறி குணம் ஆனது கூழுக்கும்,மீனுக்கும் தானே ஊருக்கு திருவிழா செய்ய போறனீங்கள் கடவுள் பக்தியிலா இல்லையே,ஆக நீங்கள் உதவி செய்வது பற்றி இல்லாது, இப்படி எல்லாம் செய்தோம் என பொய்களை அவிழ்த்து விட்டு நல்லவர்கள் போல எப்படி உங்களால் ஊருக்கு உலாவ முடிகிறது,படங்களை பேஸ்புக்கில் போட்டு ஊருக்கு உதவுறம் என போஸ் கொடுத்து பொன்னாடை போர்த்தி சிரித்தபடி நிக்க முடிகிறது,நல்லவர்களே பதில் தரலாம்.

“எரியும் சிதை நெருப்பை அணைக்கலாம் நீறு பூத்த நெருப்பு அணையாது”

#குறிப்பு...::இவை தொடருமாக இருந்தால் தனித்தனியாக பெயர்கள் போட்டு எழுத பெரிய நேரம் எடுக்காது,வித்தியா வீட்டுக்கு வந்த பலர் நாங்க காசுகொடுத்தம் இன்னாரிடம் தந்தவையா என கேட்பதால் அதுக்கு ஒரு முடிவு எடுக்கவே எழுத நேர்த்தது,அந்த பணம் பற்றி நீங்கள் பொதுவெளி அறிக்கை விடுவது உகந்தது.

போராளீஸ் ஓர் பார்வை.

இந்த சொல்லை எழுதி எழுதியே ஒரு புதிய சொல்லாக வந்துவிட்டது ஆகவே இதை தவிருங்கள்,இந்த போராளீஸ் என்னும் சொல்லை நீங்கள் எதற்கு பாவிக்கிறீங்க என எனக்கு தெரியவில்லை என்பதாக ஒருவர் கவலை தெரிவித்தார்.

போராளீஸ் என்னும் பதம் கையாளக்காரணம் போராளிகள் என்பவர்கள் புனிதமானவர்கள் ஒரு இலட்சிய பாதையில் தங்களை கொடுத்து அதற்காக உழைத்தவர்கள்,சரியான தலைவன்,நேர்த்தியான வழிகாட்டல்,ஒழுக்கம்,கட்டுப்பாடு,பெரியோரை மதிக்கும் குணம்,பெண்களுக்கு கொடுக்கும் உன்னத சகோதரத்துவம் அழமான நேசிப்பு,என போராளிகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறு ஒரு பார்வையில் கெட்டுவெட்டி நேர் மரமாக ஒருவரால் அழகாக வளர்க்கப்படும் போராளிகள்,தங்கள் பாதையில் இருந்தும் ,சுய ஒழுக்கத்தில் இருந்தும் என்றும் மாறவோ மாற்றவோ முடியாத ஒருவராக இந்த சமூகத்தில் உயர்த்து நிப்பார்கள்.இவர் தான் இவனின் தலைவன் என வேறு ஒரு நபர் பிரித்து அறியும் அளவுக்கு அவர்கள் குண இயல்புகள் இருக்கும்,ஏனெனில் அவர்கள் தேர்த்து எடுத்த பாதை அதை வழிகாட்டி போன தலைவன் அப்பழுக்கில்லா ஒரு மனிதனாக இருப்பார்.

ஆனால் இணைய வெளியில் போராளீஸ் என பாவிக்க காரணம்.

இந்த சமூகத்தின் விடுதலை போராட்டத்துக்கு எந்தவிதமான உதவிகளை கூட செய்திராத,ஒரு போஸ்டர் தன்னும் ஒட்டாத ஒருவர் தன்னை தானே விடுதலை விரும்பியாகவும்,தான் கட்டுப்பாட்டில் தான் இலக்கே இருக்கிறது என்பதாகவும்,தான் மட்டுமே அந்த தலைவனை போற்றி பாடவல்ல புலவனாகவும்,தனக்கே இந்த மண்மீதும்,மக்கள் மீதும் அதீத அக்கறை உள்ளவனாகவும்,பேச்சு,எழுத்து வரை தரக்குறைவான வார்த்தைகள்,வசைவுகளை அள்ளி தெளித்து மற்றவர்களை தூற்றும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும் உலாவ வரும் ஒருவரை போராளீஸ் எனலாம்......

அது போக போராட்டம் தொடங்கி ஒரு தோட்டா வெளியேறிய உடன் வெளிநாடு வந்தவனும்,ஆயுத போர் முடிந்து அனைத்தும் சாம்பல் மேடு ஆகியபின் வெளிநாடு வந்தவன்,போராட்டம் நடந்த பொழுது அவர்கள் கட்டுப்பாட்டில் கூட வாழாது எதிரியின் கட்டுப்பாட்டில் வாழ்த்து சகல இன்பங்களை அனுபவித்து விட்டு வெளிநாடு வந்தவனும்,இன்று தன்னை போராளி என சீனை போட்டு தேசியம் பேசி அவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்துகொண்டு உண்டியல் குலுக்குவதும்,பணம் சேர்ப்பதும் என முழுக்க தன் சுயநல போக்கில் வாழ்பவன் போராளீஸ் எனலாம்...

மொத்தத்தில் இவர்கள் தேசியம் விடுதலை என பேசி பேசி தங்கள் பைகளை நிரப்புவதை, யாராவது ஒருவன் தடுத்து நிறுத்தி,அதுக்கு எதிராக பேச தொடங்கும் போது அவனை துரோகி எனவும்,செம்பு எனவும்,அவன் ஆள் ,இவன் ஆள் எனவும்,கூட்டம் சேர்த்து கூப்பாடு போட்டு உரத்து கத்தி சபையை குழப்பி தங்கள் இருப்பை தக்கவைக்க போராடும் இவர்களை போராளீஸ் எனலாம்.

தொடரும்.....

வெள்ளி, 13 மே, 2016

அணையாத விளக்காக .

நான் வளர்த்த கனவே
எங்கு போனாய்
என்னுடைய இலட்சியமே ..
எங்கு போனாய்

நான் விட்டேனா உன்னை அலட்சியமா
வெந்து சாகிறேன் என் மகளே ...

வாழ்த்தால் ஊர் பேச வேண்டும் என்றாய்
வாழ்க்கையில் கல்விதான் கண்கள் என்றாய்
வாழ்த்து நான் சாதிப்பேன் என்றாய்
வாழ்வு முடியமுன் புதைத்தார்கள் உன்னை ..

நான் போக இடம் நீ போகவேண்டி நின்றேன்
ஆனால் நீ போன இடமோ தூரம் எப்படி வர
பாருங்கள் என் ஊர் உயரும் என்றாய்
அதுவும் என்னால் உயரும் ஒருநாள் சபதம்

இன்று சாவிலும் அதை நடத்தி போனாய்
உன் ஊர் மட்டும் இல்லை இந்த உலகே
உனக்காக அழுது சாகிறது நீதி வேண்டி
நீதி செத்தாலும் சாகும் மக்கள் நீதி சாகாது .

திங்கள், 28 மார்ச், 2016

ஈழ சினிமா எனது பார்வையில் ..அஞ்சரன்

ஒரு விஷயம் மட்டும் விளங்கவில்லை சினிமா என்பதுகூட ஒரு கலை இலக்கியத்தின் காட்சி வடிவம் தானே ஆக,நாம் சொல்லவரும் செய்திகள் மக்கள் மத்தியில் எவ்வாறு போய் சேர்க்கிறது அதை எப்படி சேர்ப்பது என்பது ஒரு கதை சொல்லியின் அதாவது (இயக்குனர்) கற்பனையில் விரியும் கனவை கமராவில் கொண்டுவந்து கொடுப்பன் ஒளிப்பதிவாளன் இது ஒரு கூட்டு இலக்கிய புனைவு போல தான் சினிமா,பாலுமகேந்திராவின் சினிமாவின் வெற்றி அவரே இயக்குனர் ஆகவும் ஒளிப்பதிவாளனாகவும் இருந்தது,பாரதிராஜா கிராமத்தை விட்டு வெளியில் வராமல் படம் எடுத்து அப்படி வெளியில் வந்து அவர் எடுத்த "கண்களால் கைது செய்" படம் தோல்வி படமாகியது; எனவே வியாபார சினிமா என்பது பொழுது போக்கை அடிப்படையில் கொண்டுருந்தாலும் அதில் ஒரு மூலையில் மனதை விட்டு அகலாத ஒரு காட்சி இருக்கணும் அதுதான் அந்த சினிமாவின் உயிர் கதையாக பேசப்படும்...........

ஆனால் எமக்கு இருக்கும் ஒரு அடிப்படை பிரச்சினை கற்றறிய முன்னமே நாம் எம்மை ஈரானிய படங்களுக்கும் உலக தர படங்களுக்கும் ஒப்பிட்டு பேசுவதும் ,அதன் தரங்களுடன் நாம் என போட்டி போட முடியாது என்னும் பெரும் கேள்வியை தூக்கி சுமப்பதும் தான்........

எம்மில் புதிதாக வரும் படைப்பாளிகள் ஒரு சிறுகதை எழுதி அது ஓர் பெயர், அல்லது அடையாளம் கொடுத்தாலே போதும் பெரும் இலக்கிய எழுத்தாளர்களை கூட அவர் எழுதுவது இலக்கியம் இல்லை, புனைவு இல்லை, எழுத்து வட்டமாக இருக்கிறது என்னும் அதீத விமர்சனம் செய்யும் போக்கே இருக்கிறது அவைகள் ஆரோகியமான கூட்டு செயல்பாடுகளுக்கு எப்பொழுதும் வழியமைத்து கொடுக்காது,சினிமா என்பது ஒரு பெரும் கூட்டு செயல்பாடு அது எல்லோரின் உழைப்பும் வெற்றி என்னும் இலக்குடன் இருக்க வேணும் அப்பொழுதுதான் அது முழுமை பெரும் வெற்றி அடையும்.....

முதலில் நாவலாக இருந்தாலும் சினிமாவாக இருந்தாலும் எடுத்தவுடன் பெரும் பெயர்களுடன் பொருத்தி பார்க்காது, (எடுத்தால் ஈரானியப்படம் போல எழுதினால் பிரஞ்சு எழுத்தாளன் போல)என இல்லாமல் ஈழ சினிமா தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கு உண்மையில் ஓரளவாவது கற்றறிந்து கொண்டு அந்த அத்துறையில் இளையவர்கள் வரவேண்டும் ,ஆனால் நாம் கண்கூட பார்க்கும் சினிமா அவ்வாறு இல்லை கமரா உள்ளவன் எல்லாம் படம் எடுக்கலாம் என்னும் நிலையும் ,கதையாடா முக்கியம் பெயர் வரணும் என்பதற்கு இந்திய சினிமாவை கொப்பி பண்ணி "லொள்ளு சபா" தரத்தில் படம் எடுப்பதும் தானே நிகழ்வாக இருக்கிறது.....

ஆக ஈழ சினிமா ஆரோக்கியமான பாதையில் பார்த்து பார்த்து செதுக்கும் சிலையாக வடிவம் பெறுமாயின் கண்டிப்பாக அதை மேன்படுத்த தயாரிக்க பலர் முன்வருவார்கள் பொருளாதார உதவிகள் புரிவார்கள் என்பது எமதெண்ணம்....

அதை விடுத்து பேஸ்புக் ,யூடிப் இருக்கிறது ப்ரியா, எதையும் சும்மா ஏற்றி விடலாம் என நினைத்து சினிமா எடுத்தால் அது கண்டிப்பாக காணாமல் போகும்,உதாரணம் அண்மையில் ஒருவர் எடுத்த படம் பல விமர்சனம் எழுந்தும் கூட அவர் சொன்ன பதில், அப்ப நீ வந்து நல்லபடம் எடு ,அல்லது மூடிட்டு படு, என்பதாகவே இருந்தது ,இவ்வாறான இயக்குனர்கள் பிழைகளை சரி செய்யாது மேல போவார்கள் என நினைப்பதும் ,சரி பெடியனிடம் விஷயம் இருக்கு என பணத்தை கொடுத்தவர்கள் இனியும் இவ்வாறன செயலுக்கு பணம் உதவி செய்வார்களா என்பதை அவர்களின் படைப்பு தான் முடிவு எடுக்கிறது...

ஆக வியாபார சினிமா பற்றி யோசிக்கமுன் ஈழ சினிமா படைப்பாளிகள் முதலில் தரமான ஒரு உரையாடல் சினிமா கட்டமைப்பை உருவாக வேண்டும் அதனூடாக பல தரமான ஈழ சினிமாவை கொடுக்க முடியும்.

முடியாது என எதுவும் இல்லை முயன்றால்.

சனி, 20 பிப்ரவரி, 2016

போராளிக்கு மட்டும் தான் மானம் உண்டா பொது மகளுக்கு இல்லையா ???????

கலாச்சாரத்தை பாதுகாக்க முடியாத எழுத்துலகம் யாருக்கு வேணும் ...உங்கள் கழிவுகளை விற்க மக்கள் வேணும் ஆனால் நீங்கள் மக்களை கண்டுக்க மாட்டீர்கள் பிரபலங்களும் பிரபலங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமும் சிந்திக்கவேணும் இனியாவது ..
‪#‎இசைப்பிரியாக்கு‬ உலக நீதி கேட்பவர்கள் முதலில்‪#‎வித்தியாக்கும்‬ ‪#‎ஹரிஸ்ணவிக்கும்‬ உள்ளூரில் நீதியை தேடுவார்களா ....
ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் ,இலக்கியவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் ஒரு சமூகம் சார்த்து சிந்திக்க வேண்டியவர்கள் ,அந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிர் குரல் எழுப்பவேண்டியவர்கள்,கண்டனங்களை பதிவு செய்வதும் முறையிடுவதும், சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கொண்டுபோவதுமாக இந்த எழுத்துலகம் இயங்க வேண்டியது ,ஒருகாலத்தில் அப்படித்தான் இயங்கியது எனலாம் .....
ஆனால் இப்பொழுது எல்லாம் ஆளாளுக்கு இலக்கிய சங்கங்களும் ,வட்டம் சதுரம் என இலக்கிய குழுக்களும் தாம் சார்த்த தங்களை சாரும் நபர்களுக்கு பஜனை பாடவே தங்களின் முழு நேரத்தையும் செலவழிப்பதும் ,எவன் காலை பிடித்தாவது பெயர் பெற துடிப்பதும் அதற்காக அம்மணமாக நிற்க கூட துணிவதுமாக மிக அநாகரிகமான மீன்சந்தை வியாபாரமாக மாறி இருக்கிறது இந்த எழுத்துலகம் ........
அதிலும் ஈழ இலக்கியவாதிகள் இந்தியாவில் ஒரு தலித் பெண்ணுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டது போல துடித்து எழுவதும்,கூட்டறிக்கை ,இலக்கியவாதிகள் கையொப்ப மனு என அவர்கள் செய்யு அழும்புக்கு அளவே இருக்காது ஏனெனில் தமிழ்நாடு என்னும் பெரும் சந்தியில் சிறு கீரை விற்க இவைகள் இவர்களுக்கு அவசியம் ஆகிறது .....
அதிலும் ஈழத்தில் இருக்கும் இலக்கிய காளான்கள் மாதம் நாலு முறையாவது இலக்கிய சந்திப்பு நடத்துவதும், அதில் பெண்கள் கலந்துகொள்ளவில்லை என கவலைப்படுவதுமாக இருக்கு ஒரு சில குறுப்புக்கள், இந்த சமூகம் சார்த்து சிந்திப்பதே இல்லை அதற்காக ஒருநாளும் பேசியதும் இல்லை குரல் எழுப்பியதும் இல்லை, எங்காவது பிரபலம் கிடைக்கும் என்றால் அங்கு போய் நின்று படத்துக்கு போஸ் கொடுப்பதும் ,செல்பி எடுத்து போடுவதும் அத்துடன் முடிந்துவிடும் போராட்டம் .....
ஆக இணையங்களில் நாடுபிடிக்கும் போராளிகளும் தமிழ்தேசிய அதி உச்ச விசுவாசிகளும் ,தங்களை புரட்சியாளர்கள் என காட்டுவதற்காக அடிக்கடி படங்களை மாற்றி வீரவணக்கம் போடுவதும்,தளபதிகளின் படங்களை போட்டு கதை சொல்வதுமாக அவர்களின் பொழுது போகிறது ....
ஆக ஈழ எழுத்தாளர்கள் என அறியப்படும் பலர் ஒரு இனம், அந்த சமூகம் பட்ட அவலங்களை எப்படியாவது விபரித்து கதை எழுதி ,அதை எங்காவது ஓடி ஓடி விற்று தங்களின் பிழைப்பையும் , இருப்பையும் தக்கவைக்க எடுக்கும் முயற்சியில், ஒரு துரும்பாவது சமூகம் சார்த்து ஓர் சீரழிவு ,பெண்கள் மீதான வன்முறை ,என்பவற்றுக்கு குரல் கொடுப்பதில்லை ,இசைப்பிரியாக்கு காட்டுகூச்சல் போடும் இந்த அடிப்படை அறம் பிழைத்த நியாவதிகள் வித்தியாவும் , ஹரிஸ்ணவியும் கண்களுக்கு தெரிவதில்லை .........
ஆக எமக்கு இசைப்பிரியா மட்டுமே ஈழபெண்ணாகவும் பாலியல் வல்லுறவுக்கு ஆள்பட்ட பெண்ணாகவும் தெரிவதால், எம் சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் பெண்களாக தெரிவதில்லை சிங்களவன் செய்வது மட்டுமே பாலியல் வன்புணர்வு இதை தமிழர் செய்தால் அதை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் மனநிலையில் நாம் வாழ்கிறோமா .......
என் வீட்டுக்கு வராதவரை நாம் மௌனமாக இருக்கலாம் ,அது தீவிலையாம் இது வவுனியா காட்டிலையாம் என பேசிவிட்டு கடந்து போவோம் ஒருநாள் உங்கள் முற்றத்தில் உங்கள் சகோதரி சீரழிந்து கிடப்பாள் அப்பொழுதாவது உங்களுக்கு பேசுவதற்கு எழுதுவதற்கு முனைப்பு வருகிறதா என பார்க்கலாம் அதுவரை வேடிக்கை பார்ப்போம்.

புதன், 17 பிப்ரவரி, 2016

இப்ப துரோகிகள் அப்ப ஹிரோக்கள்.

இளையராஜாவின்  தரை தப்பட்டை  இசை  போல கூவி  செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும்  இடம் எல்லாம் பழைய தும்பு  தடிகள் போல தும்பு  எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி  இருந்தது ....

நாலு நிலைகளு  உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி  லெப்டினன் கேணல்  காதம்பரி  தலைமையில் அதை  எதிர்கொண்டு இருந்தது,நிலைகள்  உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை  பேசிக்கொண்டு  இருந்தது ...

பப்பா லையினில்  அடிவிளுகுதாம் எக்கோ  பக்கம்  உள்ளவர்கள்  உடனம்  பக்கவாடாக  சப்போட்  கொடுக்கசொல்லி கட்டளை  வருகிறது,வோக்கியை கையில் ஏந்தியபடி  தனது கோல் கொமாண்டோ ரைபிளை  தூக்கி  பெடியள் வேகம் வேகம் என்கிறார் தீபக் மாஸ்டர்,பிள்ளைகள்  மாட்டிட்டு  அடிச்சு  எடுங்கோ  வெளியில் என மாறி  மாறி மேஜர்  சுஜாத், ஜெனாவின்  செக்சனுக்கு சொல்லிக்கொண்டு  சண்டை  நடக்கும்  இடம்  நோக்கி குனித்த படியே மூன்றும் மையில் ஓடும்  நிலை,கொஞ்சம்  நிமித்தாலும் எங்காவது  வெடி  கொழுவும் என்னும் பயம் எல்லோரு மனங்களிலும்  ஓடியபடி இருக்கிறது .....

முன்னாடி  போன  அணி சண்டையில்  பின்  வளங்கள்  இல்லாமல் போக சண்டை  தளர்வு நிலைக்கு  வருகிறது அது  எதிரிக்கு  வாய்பை  கொடுக்கிறது,  வேவுக்காரர் வருகிறார்கள்  நிண்டு  பிடியுங்க சப்போட்  வந்து  சேர்த்திடும்  என  அவர்களுக்கு  தைரியம்  கொடுத்தபடி,  உள்  நுழைகிறது  தீபக் மாஸ்டர்  அணி நிலை  எடுங்க  அவசரம்  வேணாம் வளங்கள்  வரும்வரை  தக்க வைக்கணும் என்னும்  நிலையில் களம் இருக்கிறது....

ஒரு வி  வடிவில்  நாலு  காவல்  அரணையும் எதிரி  தனது  கட்டுப்பாடில்  கொண்டுவந்தான், இங்கிருத்து  அங்கால  கடக்க முடியாது மற்ற பக்கம்  உள்ளவர்கள்  இந்த  பக்கம் நகர  முடியாமல்  ஆறு  குறுக்கே  இருந்தது , ஒன்றில் இந்த பக்கம்  உடைச்சால்  மட்டுமே  அவர்களுடன்   தொடர்பை  ஏற்படுத்த  முடியும் அல்லது  தனிப்படும்  இங்குள்ள  நிலைகள்  வளங்கள்  வருவது கடினம் என்னும்  நிலை மதியம் நெருங்க  சோர்பு களைப்பு  பசி  என  ஒரு  மந்தமான  சூழல்  நிலவுகிறது அந்த  பதட்டம் பொறுப்பாளர்கள்  கண்களில்  தெரிகிறது சும்மா  அடிக்க   வேணாம்  ரவுஸ்  முடிக்க  வேணாம் உதவி  வரும்வரை  தாக்கு  பிடியுங்க  ......

ஒகே ஆக்கள்  கிட்ட  வந்திட்டாங்கள்  இப்ப  வந்திடுவாங்கள்  ஒகே  ஒகே  என  வோக்கியின்  ஒலியில் தெரிகிறது நம்பிக்கை ,தலையில் கறுப்பு துணி  (முறால் துணி) என்பர் கைகளில் பவரான ஆயுதங்கள் ஒன்பது பெயரில்  மூன்று  பேர்  இடம் எல் ம் ஜி  இருந்தது  அணியை  கூட்டி  வந்த பொறுப்பு  கட்டளை  இடுகிறான் பொடியள் அங்கிட்டு  போட்டு  உசக்க  அடி ,டேய் நீங்க  மருக்கா போட்டு  கொடுங்க சப்போர்ட்  இவனுக கொடுப்பாங்க என பரபரப்பாக  பேசும்  போது  தெரிகிறது அவரின்  பேச்சு  மொழியில் மட்டக்கிளப்பு ஜெயந்தன்  அணி  என ....

நம்ம  ஆக்கள்  செல்  போட்டு  கொடுப்பங்க  பின்னேரத்துக்குள் சண்டை  தொடங்கி மீண்டும் நாலு  நிலையும்  பிடிக்க வேணும் ,மீண்டும் தொடங்கியது பெரும் சமர் எதிரியின் மிக  அதீத  சூட்டு வலுவை  எதிர்த்து  இரண்டு  அணிகளாக  உள்   போகிறது போராளிகள் அணி அடிச்சு மூடினால் முன்  நிக்கும் தங்கள்  வீர்கள் நிலை  கேள்வி  என  யோசிச்சு  எதிரி  பின்  நகர  தொடங்க போராளிகள் மன  நிலை  உற்சாகம் அடைகிறது ஓடுறான்  அடி அடி  என வேகம் எடுக்கிறது சண்டை ,எல்லாம்  முடிந்து வழமைக்கு திரும்பும் போது பதினாறு போராளிகள் மண்ணை முத்தமிட்டு இருந்தனர் ...

மச்சான்  ஆள் முடிச்சாம்  என சாவை சாதரணமாக  சொல்லிக்கொண்டு காவி போனார்கள்  சக தோழர்கள்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பாசத்தின் விலை.

என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க ,

ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ......

என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்டியது தான் ,இங்க பிரச்சினை என்று வேறு வேலைக்கு போனால் அங்க வேறு பிரச்சினை இருக்கும் சரி விடுங்க இதுகளை கதைச்சா தலை வெடிக்கும் , உண்மைதான்டா தம்பி ஆனால் , ஆனால் என்ன அண்ணே சொல்லுங்க நீங்க எதோ வேற பிரச்சினையை வைச்சு கதைப்பது போல இருக்கு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்க நான் கேட்கமாட்டான் நேரம் ஆகுது வீட்டுக்கு போங்க அக்கா பார்த்துக்கொண்டு இருப்பா ....

உனக்கு சொல்லுறதில என்னடா இருக்கு நீ எனக்கு ஒரு சகோதரம் போல ,இல்லை எங்கட மூத்த அக்காவின் பிள்ளைகளை இவன் தம்பி ரவி தான் இவ்வளவு காலமும் பார்த்தவன் ,

ஓம், ஓம் எனக்கு தெரியும்.... நீங்கதானே அவரை இங்க கூப்பிட்டு விட்டது

ம்ம் அவனும் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில இருந்திட்டு வெளியில வரும்போது வயதி முப்பது தாண்டி போட்டுது ,நானும் எவ்வளவு காலம் பார்க்கிறது பிள்ளைகள் வளர வளர தேவைகள் கூடுது அதனால தான் அவனை கடன்பட்டு கூப்பிட்டு விட்டன் ,வந்தவன் எனக்கு காசு தரவேணாம் நீ மூத்த அக்காவின் பிள்ளைகள் மூன்றையும் வளர்த்து விடு என்று நான் சொல்லி போட்டு விடுட்டுடன் அவனும் சரி அண்ணை என்று இவ்வளவு காலம் பார்த்தவன் ....

கடைசி பெடியன் பிறந்து பத்தாம் நாள் அத்தான் கிபீர் அடிச்சு செத்து போனார் ,அந்த மூன்று பிள்ளையும் அவள் வளர்க்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ,நான் இங்க இருந்து காசு கொடுத்து விட்டாலும் அது போயிட்டா கொடுத்து விட்ட ஆள் கொண்டுபோய் கொடுத்து இருக்குமா என்று எல்லாம் இரவு பகல் எல்லாம் யோசிப்பன் ,உனக்கே தெரியும் அப்ப ஒரு தொடர்பும் இல்லை வன்னிக்கு கதைக்க ...

உண்மைதான் அண்ணே போன் கதைக்க வேணும் என்றால் கூட முதல் இரண்டுநாள் வந்து சொல்லி அதுக்கு பிறகு போய் காத்திருந்து கதைக்க வேணும் ...

ம்ம் அப்படி தான் இருபது வருடத்தில் அக்காவோட இரண்டு தரன் தான் கதைச்சனான் எடா .. சரி அதை விடு ,இப்படி இவனுக்கும் வயது நாற்பது ஆகுது இனி எங்க கலியாணம் என்று அவனுக்கும் வெறுப்பு வந்திட்டு, பிறகு இல்லை கடைசி காலத்தில தனிச்சு போடுவான் என்று நான் தான் பிடிவாதம் பிடிச்சு, கலியாணம் பேசி ஊரில தெரிச்ச பிள்ளை தான் நாலு மாதம் முதல் இந்தியாவில போய் கட்டீட்டு வந்தவன் ..

ஓம் ஓம் ஒருக்கா படம் போனில காட்டின நினைவு இருக்கு இப்ப என்ன அவைக்குள்ள என்னமும் பிரச்சினையா ...

சீ சீ அவள் தங்கமான பிள்ளை ,பிரச்சினை என்ற அக்காவின் பெடி படிச்சவன் இனி குடும்பத்தை பார்ப்பான் ,வளர்த்திட்டான், வேலைக்கு போக தொடங்கிட்டான், என்னும் துணிவில தான் நான் சந்தோஷமா இருந்தான் ,பட்ட துன்பங்கள் துயருகள் எல்லாம் மறத்து, அடுத்தவள் பொம்பிளை பிள்ளை அதை அவன் கரை சேர்ப்பான் என்று இருக்க நேற்று அக்கா போன் பண்ணி அழுகிறா என்ன நடந்தது என்று நான் கலவர பட்டு பயந்து போனேன் ...

ஏன் அண்ணே என்னாச்சு ,ஏதாவது வாகனத்தில் அடிபட்டு போட்டானே பெடியன் ..

கோதாரி அப்படி போய் இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டுருப்பன் அந்த மூதேவி இப்ப தான் இருபத்தி ஒரு வயது அவையின் வீட்டில் இருந்து மூணாவது வீட்டில இருந்த ஒரு பெட்டைய கூட்டிக்கொண்டு ஓடிட்டாம் என்று சொல்லி முடிக்கும் போது .....

இவன் குடும்பத்தை பார்ப்பான் என்று நான் இருக்க ,இவன் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு போயிட்டான் என கண்களில் நீர் அணைக்கட்டில் நிறைவது போல முட்டி நிக்க கதையை சொல்லி முடித்தார்....

யோசிச்சு பார் அப்பு நானும் கடன் ,வந்த தம்பி உழைச்சு கொடுத்து, படிப்பித்து, வீடு கட்டி கொடுத்து,மோட்டார் சைக்கிள் முதல் கொண்டு வாங்கி கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை நாற்பது வயதில் தான் ஆரம்பிக்க போக இந்த நாய் இந்த வேலையை செய்து இருக்கு ...

விரும்புறது கலியாணம் கட்டுறது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சமாவது குடும்பத்தை யோசிச்சு பார்த்தியா ,தங்கச்சி இருக்கு தம்பி இருக்கு படிப்பிக்க வேணும் அம்மா இவ்வளவு காலம் விதைவையாக இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கி விட நாங்க இப்படி தெறிக்கும் வேலையை செய்யலாமா என்று ...

சரி அண்ணே அழவேணாம் அவன் பார்ப்பான் குடும்பத்தை மாமா ஆக்கள் எப்படி கஷ்டபட்டு தன்னை வளர்த்தவர்கள் என்று விளங்காமல் இருக்குமா ,சரி நீங்க அழாமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னும் ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னால் அவருக்கு வேறு என்னத்தை தான் கூற முடியும் .