ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பர்வதத்தின் சிவலையன் .!

பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார்.

சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்...

அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு.

வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு .

அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்...

சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை.

அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு .

சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..

புதன், 25 செப்டம்பர், 2013

நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..!

வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்....

அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட் அடிக்கும் எண்ணங்களுடன் பாய்ந்து வரும் வாலிபர் அதிகம்.. பல காதல்கள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் இது.. போனவருடம் தொடங்கியவர்கள் இந்தவருடம் பிள்ளைக்கு மொட்டை போடவும் வந்து இருப்பார்... இப்படி இந்த இரவு திருவிழா கோயில்கள் முக்கியம் பெறும்...

அப்படி ஒரு அப்பாவி தனமா இடம்பெயர்ந்து வந்த புதிதில் வவுனிக்குளம் அருகில் இருந்த போது அந்த வீட்டுக்கார அண்ணை என்னை கூட்டி போனார்... அது எனக்கு ஒரு புது அனுபவம்... 500க்கு மேற்பட்ட கோழிகள் நூற்று கணக்கா ஆடு மாடு என நேத்திக்கு விட்டு கொண்டுவந்து கொடுக்கப்படும் அவைகள் விடியும் பொழுது ஏலத்தில் விடுவினம்... இதை வாங்கவேண்டு சந்தையில கோழி வியாபாரம் செய்கிறவ பூரா அங்க நிப்பினம்.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

எங்கபோய் பார்த்தாலும் திரும்புற இடம் எல்லாம் பெண் பிள்ளைகள்.. உள் ஊருக்குள்ள இருக்குற பிள்ளைகள் எல்லாம் இன்னைக்கு பார்த்தா தான் உண்டு.. அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காது வீடு.. தேடியெல்லாம் போய் பார்க்க முடியாது... அப்புறம் இடியன் கட்டு துவக்கு தான் பதில் சொல்லும் என்பதால் இப்படியான இடத்தில் காதலை சொல்ல முடிஞ்சா சொல்லி போடவேணும்.. விட்டா அடுத்த வருடம் தான்.. நம்ம பெடியளும் அப்படித்தான் தோட்டம் வயல் எண்டு திரியுறவங்கள் இப்படி ஒருநாளுக்கு வடிவா வெளிக்கிட்டு மாப்பிளை கோடன் சாரம் மாட்டின் சேட்டு அதில முன்னுக்கு ஒரு மையில் தாள் வைத்து கொண்டு வந்து நிப்பினம் அம்புட்டு அழகு... .

அதை விட நம்ம பெண்ணுங்க ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சாக்கரை மாதிரி.. எல்லோரையும் கண்டா ஒருநேரத்தில் யாரை பார்ப்பது எண்டு ஒரு குழப்பம்.. கோயிலுக்கு நேத்திக்கு விட்ட சேவல் கணக்கா அழகா தலை வாரி இழுத்து இரட்டை பின்னல் போட்டு ஒன்றை முன்னுக்கு விட்டு மற்றதை பின்னாடி போட்டு நெற்றியில் ஒரு திருநீற்று கீறுபோட்டு ஓரக்கண் பார்வையும் பார்த்து வருவினம்.. யாரு யாரு யாருடன் வந்து நிக்கினம் எண்டு எல்லா தகவலும் பார்வையில் எடுத்து போடுங்கள்.. அப்ப ஊரில பரிசியன் எண்டு ஒரு பவுடர் இருந்தது.. அதுதான் அங்க உள்ளதில் விலை கூடியது.. அதை எடுத்து அப்பி நல்லா பூசி வாற பெட்டையளுக்கு என்ன வெள்ளை அடிச்சு கிடக்கு எண்டு நம்ம பையனுகள் நக்கல் வேற.. .

இப்படி காவல்துறைக்கு தெரியாமல் கடிதம் கொடுத்து முடிவு கேட்பது ஒரு திறில்.. பகிடி கூட குறைய விட்டதை கண்டால் முடிஞ்சுது கதை.. கூட்டிட்டு போய் கொட்டிலில இருத்தி போடுவினம் என்ட பயம் வேற.. மணிக்கடை கச்சான் கடை அலுமினிய பாத்திரக்கடை பிளாஸ்டிக் கடை எண்டு எங்க எல்லாம் நமக்கு பிடிச்ச பிள்ளை போகுதோ அங்கு எல்லாம் போய் பின்னாடி நிண்டு விலை கேட்டுட்டு வாறது.. ஒரு சாமம் 2 மணி வரை நல்ல பம்பலா பகிடியா போகும்.. அப்புறம் அவன் அவன் அங்க அங்க சுருண்டு படுக்க தொடக்கி போடுவாங்கள்.. அப்ப சந்திரிகா புட் பாய் ஒன்று வந்தது பெரிய பாய் இருவர் வடிவா படுக்கலாம்.. அதில் ஒன்றை வாங்கி அதை நம்ம பெடியள் நாலுபேர் போட்டு படுப்பம்.. பாட்டு சத்தம் மேளசத்தம் காவடி ஆட்டம் மணியோசை அரோகரா ஆர்ப்பரிப்பு மத்தியில் வாற நித்திரை சொர்க்கம்...

எல்லாம் முடிஞ்சு விடிஞ்சுது என்றால் இரவு அழகான பிள்ளைகள் எல்லாம் இப்ப காளி வேஷம் போட்டு நிக்கும்.. நித்திரை துக்கம் கண்களில் வழிய போட்ட பவுடர் இல்லாமல் போக கனகா கனகம்மவா தெரிவா பார்வதி பார்வதிபிள்ளையா தெரிவா.. ஓடிப்போய் முகத்தை கழுவி கழுவி ஓரளவு செகப்பாகும் வரை பெடியளை திரும்பியும் பார்க்காதுவள்.. அப்படி வெட்கம் வரும்.. பவுடரை கொண்டுவந்து இருக்கலாம் பேப்பரில் சுற்றி என்று அப்பதான் நினைவு வரும் அவைக்கு... கோயிலில் வாங்கிய கண்ணாடியும் பொட்டும் உடனம் பாவிக்கும் ஆக்கள்..

அண்ணனுக்கு தெரியாமல் மெதுவா தங்கைச்சியை கழட்டி விட்டு கதைக்க வந்தா பெடியளோட சேர்ந்து நித்திரை கொண்டுட்டு இப்ப எழும்பி நிண்டு பார்க்கிறாயடி என்று எமக்கு சொல்வதை தன் தோழிக்கு சொல்லிகாட்டி கடந்து போகும் நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..

திங்கள், 23 செப்டம்பர், 2013

விளங்கவில்லை ..!

மக்களின் தீர்ப்பை இனத்தின்
விதியை ஒருசிலர் கையில் எடுத்து
நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து
என முனிவர் கணக்கா கதை சொல்ல
கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள்

சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி
சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என
தலைமை செய்த தெரிவை நாங்களே
மாற்றுவோம் என பொங்கினர் இங்கின
பல தலைமை விளங்கவில்லை ...

பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர
இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார்
நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம்
பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம்
எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை ..

காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும்
நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது.
மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம்
புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர்
வசைகளை கையில் எடுத்தனர் சிங்கள் உறவுக்காரன்
சம்மந்தி வேற கணவன் மனைவி எங்கிறான் ..


என்ன தெரியும் இவருக்கு புலி அல்ல பூனை
இது நேற்று வந்தவர் எமக்கு வகுப்பு வேற
இதுக்கும் ஈழத்து சில ஜால்ரா மணிகள் பாராட்டு
என்ன இது அவர் என்ன ஈழத்தை விக்கவா வந்தார்
மொத்தமா வாங்கா வந்தார் எதுக்கு இவ்வளவு குதியல்
யோசிச்சேன் விளங்கவில்லை ..

மையை கையில் எடுத்த என் உறவு ஈழ மக்கள்
பூசினர் வீடுக்கு மிகுதியை பூசினர் எதிரி முகத்தில்
அடித்து போட்டு நெற்றியில் துப்பாக்கி வைத்தாலும்
உன்னை சுட்டு எரிப்பேன் என அச்சுறுத்தல் இட்டாலும்
என் வாழ்வும் சாவும் மண்ணுக்கும் மக்களுக்கும் போனால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும் ...

அரியணை ஏற்றினர் எடுத்த முடிவை சரியாக்கி
சினிமா கூத்தாடியை நம்பி பிழைக்க நாங்கள் என்ன
முட்டாள்கள் அல்ல தலைவன் நிழலில் வளர்த்த மக்கள்
சிலர் மதில்மேல் பூனையை போல விழி பிதுங்கி நிக்க
துரோகி என கூவியோர் கூட்டமைப்பின் வெற்றியை
தங்களின் வெற்றி என்கிறார் இப்பொழுது

முன்னம் அதிகாரம் இல்லை பொம்மை வேணாம் என்றார்
இப்பொழுது அவர் அதை செய்ய வேணும் இதை செய்ய வேணும்
தலைவனை மறக்காமல் மாவீரரை மறக்காமல் நடக்க வேணும்
வேண்டுகோள் போடுகிறார் விமர்சனம் சொல்கிறார் அதுதான்
அதிகாரம் இல்லா பதவி எப்படி முடியும் அவர் இவளவும் செய்ய
அதுதான் எனக்கு விளங்கவில்லை .....!

சனி, 21 செப்டம்பர், 2013

நானும் கணணியும் நாடும் ..!

நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்..

படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்கணணி வைத்து இருந்தான். மற்றவர்கள் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. வேலை வீடு நித்தா என ஓடியபடி இருப்பார். இந்த சின்ன கணணி வைத்து இருந்த அண்ணணும் இரவுதான் வருவார். வந்து சாப்பிட்டு ஒரு கொஞ்ச நேரம் இணையங்கள் பார்ப்பார். நானும் வந்த புதுசு அவர் பார்க்கும் போது எட்டி எட்டி பார்க்குறது என்ன செய்திகள் எண்டு. அவர் எவருக்கும் தனது கணணி கொடுக்க மாட்டார் (அவர் தந்தாலும் அதை இயக்கி பார்க்கும் அறிவு நமக்கு இல்லை .) பிறகு பேஸ்புக் ...டுவிட்டர்...ஜிமெயில் ...யாகூ ..எண்டு எல்லாம் கதைப்பார். தானே படங்களை பார்த்து சிரிப்பார். இந்த ஸ்கைப் எப்பபாரு நொன நொன எண்டு அடிக்கும். அதிலும் கதைப்பார். ..போனிலும் கதைப்பார். கடும் அலுவலா இருப்பார்.. நமக்கு கடுப்பாகும் பயல் போடுற சீனை பார்த்து .

இரடி மகனே வேலைக்கு போக கணனிக்கு ஒரு வேலை வைக்கிறன் எண்டு நினைப்பான். ஆனால் ஒன்றும் செய்வது இல்லை. காதால இரத்தம் வர கதை நடக்கும். சிலவேளை அரசியல் அத்துப்படி. இப்பவும் யாழ் மாவட்ட தளபதி கிட்டு தான் இருக்குறார் என்று எல்லாம் நடக்கும். நானும் பல்லை கடிச்சுட்டு கிடப்பன். ஏன் வம்பு.. திருப்பி கேள்வி கேட்டா வீட்டால இறங்கு எண்டுவான் என்கிற பயம். எங்க போறது ஆக்களையும் பெரிசா தெரியாது.. கொண்டுவந்து விட்டவன் சொல்லிட்டு போனது உனக்கு வாயில சனி வெளிநாடு விளங்கும் வரை சும்மா மூடிட்டு இரு என்றுதான்... அதுக்கா இவனின் அரசியல் அறிவை கண்டு நான் வியந்து கதைப்பேன்.. அவரும் எடுத்து விடுவர் எப்படா நமக்கு வீசா கிடைச்சு இவன் மாதிரி சீன் போடுறது எண்டு நமக்கு மனதில ஒரு ஏக்கம் .

காலம் கூடி வந்துது போலிஸ் கூப்பிட்டு விசாரணை.. எழுதி கொடுத்தது ஒன்றும் விடாமல் சொன்னேன்.. சொல்லிட்டு வீட்டுக்கு வந்தா இங்க இவங்க விசாரணை என்ன கேட்டன், எத்தின கேள்வி, விசாரிச்சது பெட்டையா பெடியா கிழவனா கிழவியா..? இதை அறிஞ்சு இவங்க என்ன செய்ய போறாங்க எண்டு எனக்கு தெரியா.. ஆனாலும் சொன்னான் எல்லாம் ..அப்ப கணணி பார்த்தபடி அரசியல் அண்ணை சொன்னார் செய்திகள் இப்ப நல்லமாதிரி போடுறாங்கள் நாடு பிரச்சினை முடிஞ்சுது என்று.. கஷ்டம் தான் கிடைப்பது என்று.. எனக்கு கடுப்பாகிட்டு.. கள்ளக்கோழி பிடிக்க கம்பி வேலி புகுந்தவன் கீறின காயத்தை காட்டி ஆமி அடிச்சது எண்டு வீசா எடுக்குறான் எனக்கு காயம் எல்லாம் இருக்கு முதுகில் பீஸ் வேற இருக்கு எனக்கு தருவான் நீங்க இருங்க என பேசிட்டு இருக்க இன்னொரு குண்டு போட்டான்.. காயம் பீஸ் இருந்தா உங்களை தீவிரவாதியா பார்ப்பான் உடனும் வீசா மறுத்து பதில் வரும் என்று.. அட நாதாரி பயலே நல்ல வார்த்தை உனக்கு வராதா வெங்காயம் எண்டு மனசில நினைச்சுட்டு போயிட்டன் .

இரண்டு கிழமை கழிந்து வீசா கிடைச்சுது கடிதம் வந்துது.. நேர வேலையால வந்தவருக்கு பாருங்க மாஸ்டர் நாங்க எவ்வளவு கதை சொல்லி இருக்குறம் எங்க ஆக்களுக்கு வெள்ளை தோளுக்கு சொல்லாமல் இருப்பமா என்று ஒரு வாய் சவடல் விட்டுட்டு வேலை இருந்தா சொல்லுங்க இப்ப வீசா இருக்கு எனக்கு எண்டு அவரின் தன்மானத்தை ஒருக்கா சுரண்டி விட்டு பார்த்தன்.. மனுஷன் நாலாம் நாள் வேலை எடுத்து தந்துது.. முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..? ஓம் சரி ஒன் பண்ணுங்கோ
நான் .பொறு

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..
அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..
சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..
சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?
போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..
சரி சரி கோவப்படாத சொல்லு..
ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?
ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..
ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........
ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....
சரி..
கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...
ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..
அதில en கிளிக் பண்ணுங்க .
ஓகே..
இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...
நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...
அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க
ஓம் வருது ம்ம் ..
அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு
ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....
ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ
ம்ம் பச்சையா ஓடுது .
சரி விடுங்க அதுதானா வரும் ..
வந்திட்டு..
இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..
ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..
அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..
சரி பேஸ்புக் முதல் வேணும் ...

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்
நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .
அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..
ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. ஒருநாள் அவன் எனக்கு செம பேச்சு என்ன உங்களுக்கு பிரபலம் ஆக்கி வாரா பிளான் இல்லையோ எதாவது போராட்டம் பற்றி எழுதுங்க நீங்க வன்னியில் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் எழுதலாம் .. அப்படியா இனி எழுதுறன் எண்டு அடுத்த நாள் தொடங்கி போராட்ட பதிவுகள் தலைவரின் படம் ஊர்வலம் எண்டு எல்லாம் போட்டு எழுத லைக்கும் கொமன்சும் குவியுது எனக்கு தலைகால் புரியா சந்தோசம் பாருங்கோ...

நான் அந்தசண்டையில் நிண்டன் அங்க ஆமியை பிடிச்சான் இங்க காயப்பட்டன் எண்டு எழுத எழுத நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டு போகுது.. ஒருநாள் காணாட்டி உள் பெட்டியில் தேடி செய்திகள் என்ன ஆச்சு எங்க போட்டியல் என்ன நடந்தது எண்டு.. ஒரு பெரிய அளவில நாமக்கு கவனிப்பு பாருங்கோ.. நாம இரண்டு வேலை அதால இருப்பது குறைவு எண்டு சொல்ல முடியுமா.. அடிச்சு விடுறது ஒரு முக்கிய சந்திப்பு அதுதான் வரவில்லை அப்படி இப்படி கதையா விடுறது.. அவனுகளும் அதை நம்பி நம்ம பெரிய ஆள் போல அண்ணை எண்டு நினைக்குறது.. நாள் போக போக பேஸ்புக் சலிச்சு போக நமக்கு நாமே கேள்விகேட்டு எதுக்கு இந்த பிழைப்பு ஏன் ஊரை ஏமாற்றுவான் எமக்காக மடிந்தவர் தியாகங்களில் நான் ஏன் சினிமா காட்டவேணும் நாலு லைக்குக்கு ஆக அவர்கள் சாதனைகளை எனது என சொல்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்...

அன்று முடிவு எடுத்தேன் இனி பேஸ்புக் போவது இல்லை கணக்கை செயல் இழக்க பண்ணிட்டு நிமிந்த போது என்னும் ஒரு மன நிறைவு எதோ ஒரு பாரம் குறைந்த மாதிரி இருந்துது பின்னர் புத்தகங்கள் வாசிக்க என்னை பழக்கி கொண்டேன் பொழுதை வேறு வழிகளில் செலவு செய்வது எப்படி என என்னை தயார் படுத்தி கொண்டு வந்து இருந்த தேசத்தின் மொழியை படிக்க கிளம்பினேன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து..!

சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் .

தண்ணி எடுக்க வந்த அம்மா எங்கடா வாளி என்ன கனவு கானுறாய் என கேட்கும்போது தான் தெரிஞ்சுது வாளி போட்டுது எண்டு. பொறன எடுத்து தாறன் எதுக்கு கத்துறா என மறு மொழி பேசி கொக்கத்தடி எடுத்து வந்து கிணற்றில் விட்டு துலாவி ஒருவழியா வாளியை மீட்டு போட்டன். தண்ணியை அள்ளி அம்மாவின் பிளாஸ்ரிக் வாளியில் ஊற்றிகொண்டு இருக்க அம்மா சொன்னா இண்டைக்கு கச்சேரியில புது நிவாரண அட்டை கொடுக்கினம் என்னை கொண்டுபோய் அதில இறக்கிவிடு சைக்கிளில கெதியா வா சனம் வரமுதல் போகவேணும்... நான் ஓம் நீங்க வெளிக்கிடுங்க இப்ப வாறன் ஆனால் உள்ள வரமாட்டன் சரியா என்று கூறிக்கொண்டு முகத்தை கழுவ தொடங்கினான்..

இந்த குடும்ப அட்டை நிவாரணம் அப்படி ஆன இடத்துக்கு போறது நமக்கு வெட்கம். பெண்பிள்ளைகள் நிண்டா என்ன நினைக்கும்? நாங்க நிவாரணம் எடுத்து சாப்பிடுற குடுமபம் எண்டு ஒரு வரட்டு கௌரவம் தான். சரி என அம்மாவை ஏற்றி கொண்டு அங்க போனால் சரியான சனம். என்னடா இது... ஒரு ஐயா சொன்னார் தம்பி கலையில வந்து நம்பர் எடுத்தவைக்குதான் இண்டைக்கு கொடுப்பினமாம் மற்ற ஆக்களை நாளைக்கு காலையில வரட்டாம் எண்டு சரி எண்டு அடுத்தநாள் வேலைக்கு போய் நான் நம்பர் எடுத்திட்டு நிக்க அம்மா சுணங்கி வாறன் எண்டு சொன்னா நானும் 9 மணியாகும் எண்டு சைக்கில் கரியரில் ஏறி இருக்குறன் ...

அப்பொழுது ஒரு பிரமிப்பு. நான் அன்று பார்த்த அதே பெண்ணு தன்னுடைய தாயுடன் வாரா. உடனும் முகத்தை லேஞ்சி எடுத்து வடிவா துடைச்சுபோட்டு சேட்டு கொலரை ஒருக்கா சரிபண்ணி, பார்த்தும் பாராதது மாதிரி ஒரு பில்டப்பு கொடுத்து போட்டு இருக்க எனக்கு பக்கத்தில வந்து நிண்டு அவாவின் தாய் எப்ப நம்பர் கொடுப்பினம் என அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் விசாரிக்கிறா.. அந்த பெண் சொன்னா இண்டைக்கு கொடுத்து முடிஞ்சுது இனி நாளைக்குதான், ஒருநாளைக்கு 150 பேருக்குமட்டுமே நம்பர் கொடுக்கினம் என்றவுடன் அவளின் அம்மா ஐயோ அப்ப இண்டைக்குக்கு இல்லையா என்ன செய்ய என மிக வேதனையா தலையில் கைவைத்து புலம்ப நான் திரும்பி பார்த்தேன்.அந்த பிள்ளை சரி அம்மா பறுவாயில்லை நாளைக்கு வருவம் என்று சொல்லி சமாளிக்குது வெட்கபட்டு. ஆனா எப்படி பிள்ளை? நாளைக்கும் யாரு சைக்கிள் இரவல் தருவினம் நிவாரண அட்டை இல்லாட்டி நாளைக்கு எப்படி சங்கத்துக்கு போறது சமையல் சாப்பாடு என்ன அப்பாக்கு மருந்து வேற நாளைக்கு எடுக்க வேணும் என கொட்டி தீர்த்தார்..

தகப்பன் செல்லில் காயப்பட்டு நடக்க முடியாதாம் குடும்ப தலைவர் யாராவது அப்பா அல்லது அம்மா வந்தாத்தான் இங்க குடும்ப அட்டை கொடுப்பினம் என்கிற நிலைமை பிள்ளை பள்ளிக்கூடம் போகாமல் தாயை கூட்டி வந்து இருக்கு இனி நாளைக்கும் வரவேணும் பாவங்கள் உதவி இல்லை போல என பக்கத்தில் இருந்த அக்கா சொல்லிட்டு இருந்தா... மனசு ஓரம் ஒரு வலி என்ன செய்வம் நம்ம நிலைமையும் இதுதான்.. அம்மா வேற... வரப்போற நம்பரை கொடுப்பமா வேணாமா என இருமனம் போராடுது. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தன்.கொடுப்பம் நாளைக்கு வேளைக்கு வந்தா நான் திருப்பி எடுக்கலாம் தானே பாவங்கள் அழுதண்டு போறா.. உடனம் இறங்கி நடந்து போய் அம்மா நில்லுங்கோ நம்பர் கிடைக்க வில்லையா என வழி மறித்தேன்.. அவரும் ஓம் தம்பி நாங்க இருக்குறது சரியான தூரம் நாளைக்காம் என வேதனைய கூற நான் எனது நம்பரை கொடுத்தேன்.. இந்தாங்கோ எடுத்துக்கொண்டு போங்கோ நான் நாளைக்கு வந்து எடுப்பன் கிட்டதான் இருக்குறன் என.

தாயின் முகத்தில் ஆயிரம் சூரியன். மகள் ஏசுவது கூட தெரியாது வேறு எங்கோ பார்த்த படி.. யாருடைய பிள்ளையோ நீ நல்லா இருதம்பி என என்னை வாழ்த்தி நகர ஏதோ பெரிய ஒரு தியாகம் செய்த நினைப்பில் நான் மிதக்க அம்மா எதிரில்.. என்னடா இங்க நிக்கிறா எத்தினையாவது நம்பர்?? உடைஞ்சுது கனவு...இல்லை வந்தனான் சரியான சனம் எல்லாம் குறுக்க மறுக்க நிண்டு இடையால வாங்கிட்டு போகுதுகள் எனக்கு நமபர் கிடைக்க வில்லை நாளைக்கு பார்ப்பம் வா போவம் எண்டு சொல்ல எருமை விடிய வந்து ஒரு நம்பர் எடுக்காமல் எங்க பார்த்தண்டு நிண்டனி என வழமையான பூசை நடக்க சனம் பார்க்குது.. பேசாமல் வானை எண்டு அம்மாவை அதட்டிக் கொண்டு வர பின்னாடி ஒரு குரல்.. ஏய் மங்கை எண்டு அம்மாவும் நானும் ஒருசேர திரும்பி பார்க்க நம்பர் கொடுத்த அந்த அம்மா திகைச்சு போய் நான் நிக்க மங்கை எப்படி இருக்கிறா? இங்கினியா இருக்கிறா? யாரது இது உண்ட பெடியா என கேள்விகள் நீளுது .
அம்மாவும் லட்சுமி என இருவரும் கட்டி அணைத்து பரவச பட ஒன்னும் புரியாமல் நான் நிக்க அந்த பிள்ளைவேற நம்மளை கடைக்கண்ணால பார்க்க நமக்கு வெட்கம் வேற வர அந்த பீலிங்கை சொல்ல முடியாது.. பின்னர் அம்மா சொன்னா அப்பாவின் உறவுக்காரர் உனக்கு மாமி முறை எண்டு.. அம்மா கூற நமக்கு மனசில ஓடுது நீங்க சொல்லாட்டியும் எனக்கு மாமி முறைதான் என. 90இல் இடம் பெயர்ந்த பிறகு தொடர்பு இல்லை 15 வருடத்துக்கு மேல ஆச்சு இப்பதான் காணுறம் எண்டு பழைய கதை புதுக்கதை எல்லாம் பேசி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டுபோங்க பக்கத்தில்தான் எண்டு அம்மா அழைக்க; மகளா இவள் என எங்க அம்மா அருகில் கூப்பிட்டு கட்டியணைத்து முத்தம் இட்டு அப்படியே பேத்தியார் மாதிரி என்று சொல்லி ஆரதழுவி நின்றா ..நமக்கு இங்க முக்காவாசி கலியாணம் முடிஞ்சுது.

பின்னர் அம்மா சொன்னா நீ நிண்டு கூட்டி வா நான் போறான் எண்டு. பாலுக்கு பூனையை காவலுக்கு விட்டுட்டு போறா அம்மா.. நானும் தலையாட்டி நின்று உறவு கொண்டாடி போட்டு போக நீண்டநேர மவுனம் கலைத்து பேச தொடங்கினேன். உங்கட பெயர் என்ன எப்ப பிறந்தனீர் என்ன படிக்கிரீர் எங்க படிக்கிரீர் என கேள்விகள் மட்டுமே கேட்டபடி நான் இருக்க அவள் நீங்க வேலைக்கு போறிங்களா படிக்கிறிங்களா எண்டு ஒருகேள்வி நாம வாயை ஆப் பண்ணிட்டு. சரி அம்மா வாறா போவம் வாங்கோ எண்டு கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டன். நாங்க வெட்டி என்பதை எப்படி சொல்லமுடியும்?? நீங்களே சொல்லுங்க மக்களே எண்டு மனதில் நினைத்த படி சைக்கிளை எடுத்தேன். பின்னர் என்ன மாமிவீடு என்ன வேலை எண்டாலும் நாமதான் முன்னுக்கு நிப்பம். பகிடி நக்கல் என செம ஜாலியா போனது வாழ்க்கை. மீண்டும் ஒரு இடம்பெயர்வு நாம் வெளியேற அவள் எங்கு போனால் எண்டு இன்றுவரை தெரியாமல் நான் தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து.

சனி, 14 செப்டம்பர், 2013

வேதனை .!

கானகம் வயல் வெளி நடந்து
காரிருளில் கந்தகம் சுமந்து
இளமை துறந்து கல்வி துறந்து
வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு

என் மண் என் மக்கள் என சுவாசித்து
என் தலைவனை உயிரிலும் மேலாய்
விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு
தோழர்களுடன் சேர்ந்து பயணித்து
மீண்டு வரும்போது

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து
வலி சுமந்து இளைப்பாறும் போது
விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும்
முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து
கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா
முன்னமே வந்ததால் போராளிகள்
நாங்கள் முட்டாள் தனமா கடைசியா
வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க
உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க
கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்
நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்
எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை
விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை
எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி
ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்
உங்களின் வேஷம்களை கலைக்க
உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

மீண்டும் வருவார்கள் புலிகள் அதுக்கு முன்
புலிகளை வைத்து பிழைப்பவரிடம் இருந்து
புலிகளை காப்பற்ற வேணும் ஒரு தமிழனா
என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட
நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட
அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

வியாழன், 12 செப்டம்பர், 2013

வில்லியம் வாட்டர் பம்மும் விநாசியரும்.!

விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு.

ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒரு பயிர் நிக்கும். மண்ணெண்ணை தட்டுபாடு நிலவிய காலம் இரண்டு வாளி கொழுவி கைகளால் நீர் இறைத்து பயிர் செய்யும் அவரை பார்க்கும் போது கவலையா இருக்கும்.
மூனும் பெண்பிள்ளைகள் அப்பாக்கு உதவியா பள்ளி போட்டு வந்து புல்லு புடுங்குறது கிளி பார்ப்பது என பாட புத்தகம் ஒரு கையில் வைத்து படித்த படி இவர்கள் செய்யும் வேலைகள் அதிகம். அப்ப எல்லாம் நாங்க கலெக்டர் வேலை காலையில் எழும்பி மூஞ்சிய ஒரு தேய் தேய்த்து போட்டு சைக்கிள எடுத்து கவட்டில வைச்சா எங்க போறம் எண்டு எங்களுக்கே தெரியாது..போயிட்டு இருப்பம். அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..
ஆனால் விநாசியர் அப்படி இல்லை அதிகாலை எழும்பி பனி மூட்டம் தலைப்பாகை கட்டிய படி பன்டி வாற நேரம் என்று காணிய சுற்றி வருவார் ஒருநாள் வழமையா பள்ளிக்கூடம் போன பிள்ளை திருப்பி வரவில்லை. மூத்த மகளை காணம் தம்பி என்றபடி வந்தவர் தனது சைக்கிள் காற்று இல்லை சைக்கிளை ஒருக்கா தங்கோ பார்த்து வர என வாங்கி போனார். திரும்பி வந்து சோகமா பத்து பிள்ளைகள் ஒன்றா இயக்கத்துக்கு போனதாம் அதில் என்னுடைய பெண்ணுமாம் என்று வரும் கண்ணீரை துடைத்தபடி படுத்து இருந்து விட்டத்தை பார்த்த படி இருந்த எனக்கு அவரின் உரையாடல் காதில் என் உணர்வுகளை ரோஷ நரம்புகளை சுண்டி விட்டு போனது.

வெளியில் வர எனக்கே வெட்கமாகிட்டு நாம் என்ன செய்தோம் எம்மால் என் குடுமபத்துக்கு அல்லது நாட்டுக்கு என்ன பிரயோசனம் என யோசிக்கும்போது பூச்சியம். மனதில் ஓடிய நெருடலான விசயங்களை எண்ணிய படி முகத்தை கழுவி விட்டு வந்தது முற்றத்தில் நின்று பார்த்தால் விநாசியர் அந்த மன நிலையிலும் முளகாய் கன்றுக்கு தண்ணி இறைக்க குழாய் போட்டபடி. வழமையா அவரின் மூத்த மகளே அந்த வேலையை செய்வாள் இதுவரை நான் சும்மா தன்னும் என்ன எப்படி எண்டு எட்டி பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன அண்ணை வெயில் படத்தான் எழும்பிவியல் போல என என்னை நக்கல் பண்ணும் அவளும் இப்ப இல்லை என்கிற மன நிலையில் ஒரு உந்துதல் வர நான் விநாசியர் அருகில் போனேன்.

விடுங்கோ நான் இழுக்கிறன் என வாங்க அவர் சொன்னார் இல்லை தம்பி உமக்கு பழக்கம் இல்லை குழாய் கண்டில பட்டுட்டா மரம் ஒடிஞ்சு போடும் என்று. சரி என அவருடன் சேர்ந்து தூக்கி கொடுத்து விட்டு கிணற்றடிக்கு வந்து வாட்டர் பம்மை இழுக்க வேணும் என்று சொன்னார். ஓம் எண்டு அவரோட வந்தன். தம்பி நோஷால் ஊசியை குறை நான் இழுக்கும்போது சொக்கை விடு வில்லியம் பம்முக்கு அப்ப நல்ல மதிப்பு தம்பி 15 வருடம் மேல கிடக்கு நமக்கு சோறு போடுது எனக்கு இதுகும் ஒரு பிள்ளைமாதிரி.

சரி அதில போய் சின்னவள் வேல்மூடி சூடாக்கி வைத்து இருப்பால் எடுத்து வா.. பக்கத்தில ஒரு சின்ன சிங்கர் சூப்பி இருக்கும் அதை கவனமா கொண்டுவா.. நான் கிணத்துக்குள் குழாய் இறக்கிறன்... சரி என்று நானும் கிளம்பி போய் எடுத்து வந்து சேர அவரும் தனது வேலை முடிச்சு நின்றார். நான் இழுக்கிறன் வேல்மூடிய காபிறேட்டருக்கு நேர பிடிச்சு ஒரு துளி பெற்றோல் விடு, புகை எழும்பும்போது சொக்கை கையை விடு, சரியா கவனம் பெற்றோல் இவளவுதான் இருக்கு என்று சொல்லி இழுத்தார்..

என் மனதில இவளவுனாலும் என்ன எழும்பி குழாய் போட்டு பம்மை இழுக்குறது எல்லாம் ஒரு வேலையா என அசால்ட்ட நினைத்த எனக்கு அவருடன் சேர்ந்து செய்த ஒரு இரண்டு மணித்தியால வேலை நாக்கை தள்ளி நிண்டுது..இவளவு கடினம்..வில்லியம் ஓடினாதான் இந்தமாதம் யூரியா வாங்கலாம் மிளகாய் பழுக்கிற நேரம் என சொன்னபடி சிவனே என்று கடவுளையும் அழைத்தபடி இழுத்தார் ..ஒன்று இரண்டு என போய் ஆறு ஏழு தடவை இழுத்தும் வில்லியம் இயங்க வில்லை.. களைத்து போய் ஒருவாளி தண்ணி அள்ளி குடித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் நிக்க நான் கேட்டேன் நான் இழுக்கவா நீங்க பெற்றோல் காட்டுங்க என.. நானும் உள்ள பலம் எல்லாம் சேர்த்து இழுத்து முடியாமல் இருந்திட்டன்..

மனதின் ஒரு மூலையில் ஒரு கணம் இவளவு வேலையயும் இவர்கள் தனியத்தானே செய்தார்கள் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அப்பொழுதான் புரிஞ்சுது.. சந்தையில் மரக்கறியை எடுத்து வைத்துக்கொண்டு நக்கல் கதையும் நளின விலையும் கேட்கும் எமக்கு அதன் பின்னால் இருக்கும் வலிகள் புரிவது இல்லைதான்.. சரி செடி வாடுது இவள் சின்னவள் எப்ப பள்ளியால வருவாள் என தெரியாமல் இருக்கு என விநாசியர் ஒழுங்கையை எட்டி பார்த்தார்..


அவளும் சரியா வர என்ன அப்பா இன்னும் தண்ணி இறைக்க வில்லையா என கேட்டபடி கிணத்தடிக்கு வந்தாள்.. இல்லை அம்மா வில்லியம் ஓடுறான் இல்லை என்ன எண்டு பார் என்றபடி விநாசியர் சொல்ல அவனுக்கு நான் இரண்டு தட்டு தட்டுறன் பொறுங்கோ என அந்த சாவி என்று மகள் கேட்க எனக்கு தலை விறைச்சு போச்சு.. என்ன நடக்கு இங்க என நாங்க இரண்டு ஆம்பிளைகள் முடியாமல் நிக்கிறம் இவா எப்படி செய்ய போறா என எனக்குள் கேட்டபடி நிக்க..

விறு விறு என சாவியை எடுத்து பிழக்கை கழட்டி நெருப்பில போடுட்டு இருங்க அப்பா உடுப்பை மாற்றி வாறன் எண்டு போனாள் வந்து பிளக்கை தட்டி எடுத்து எதோ ஒரு கம்பியால அப்டி இப்டி தட்டி போட்டு சூட்டோட பூட்டிட்டு வயரை கொளுவிபோட்டு தள்ளுங்க அப்பா என்று விட்டு கயிறை சுற்று ஒரு இழுவை... வில்லியம் ஓலம் எடுத்து கத்த கம்பிலிங்க எடுத்து குழாய் இறுக்கி விடுங்கோ என்றபடி அசால்ட்டா ஓவரு கொமாண்டும் கொடுத்தபடி அவள் மண் வெட்டிய கையில் எடுக்கும் போது எனது மனநிலை குதிச்சிடு நீ கிணத்தில் என்பது போல இருந்துது...

என்ன ஒரு அனுபவ முதிர்ச்சி என யோசிச்சு கொண்டு இருக்க விநாசியர் என்ன தம்பி எப்படி அவளுக்கும் வில்லியத்துக்கும் ஒரு வயது அதுதான் அவளுக்கு அவனை பற்றி நல்ல தெரியும் என்று சொல்லி சிரித்த படி போக நாங்கள் வீரவசனம் வெட்டி பேச்சிலும் நாட்கள் கழித்தோம் ஒழிய உருப்படியா ஒரு வேலையும் செய்யவும் இல்லை பழகவும் இல்லை இன்றில இருந்து அதிகாலையில் எழுவது விநாசியர் உடன் தோட்டம் செய்ய பழகுவது மரக்கறி கொண்டுபோய் சந்தையில் கொடுப்பது இனி நான் தான் செய்ய வேணும் என்கிற உறுதியுடன் வில்லியம் பம்மை முறைத்து பார்த்த படி நகர்ந்து போனேன்..

என்னுள் ஆயிரம் மாற்றம் தெரிய தொடங்கியது வன்னி மனிதர்களை பக்குவபடுத்தியது அறிவாளிகள் ஆக்கியது சுய சிந்தனையை போர் சூழல் தூண்டியும் விட்டது எமக்கு நாமே என்கிற தத்துவத்தை சொல்லமல் சொல்லி போனது காலம்..

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

ஊரை உறங்க செய்து
நாய்களுக்கு தெரியாமல் நடந்து
வெள்ளி பார்த்து திசை பிடித்து
அவன் எல்லையை தொடும்போது
ஆந்தைகள் முழித்து இருக்கும்

அவன் மட்டும் விடிகாலை பொழுதில்
குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க
அவன் கால் அருகில் அரவம்போல் நகர்த்து
அவனை கடந்து போகும்போது உள்ளம்
மகிழ்த்து இருக்கும் உள்ளுக்குள்

உள்ளே வந்துவிட்டம் என இறுமாந்து நிமிர்த்து
நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும்
யாரு நீ எங்க போற .....பதில் யோசிக்க முன்
சுடும் விசை கிழ நோக்கி போகும் அதன் டிக் ஒலி
அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும்

ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும்
சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு
வலம் இடமா பாய்த்து வேட்டுக்களை தீர்த்து எம்மை
காப்பற்றி விட்டு மறுநொடி மனது சொல்லும் இவன்
மாட்டிட்டனோ இல்லை இருக்காது போய் இருப்பன்

இல்லை எதுக்கும் ஒருமுறை பார்த்து வருவம்
என மீண்டும் அவன் நிலைக்கு மெதுவா  வந்து
உற்று நோக்கி ஓகே போயிட்டான் என மனது
ஒரு முடிவுக்கு வர முனகல் சத்தம் பக்கத்தில்
மச்சான் என இருளில் தடவி என்ன ஆச்சு என
சைகையில் கேட்டு அவன் கைகளை இறுக்க பற்றி

நீ போயிடு நான் முடிவு எடுத்துட்டன் என சொல்லு
எம்மை அனுப்ப அவன் தன்னை அழிக்க நினைத்து
நான் கவர் கொடுக்குறன் நீங்க வேலிய தாண்டுங்கோ
என்று பிடிவாதம் பிடிப்பவனை  இல்லை மச்சி அடிச்சு
பிரிச்சு போவம் வாறது வரட்டும் அது ஒண்டும்
பெரிய சிக்கல் இல்லை என சகதோழன் கூறி

இவனை நான் தோளில் போடுறன் நீ குண்டை கலட்டி
கையில வைச்சு இரு நிலைமை மோசம் எண்டா
அடி அல்லது போயிடுவம் விடிய முதல் ஓகே என
ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி கடந்து
வந்தவுடன் ஒரு துள்ளல் வரும் உலகில் அப்பொழுது
போல் ஒரு ஆனத்தம் இல்லை நட்பை மீட்டு வருவது

ஒரு போராளியின் குறிப்பேடு ..!