செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பாசத்தின் விலை.

என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க ,

ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ......

என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்டியது தான் ,இங்க பிரச்சினை என்று வேறு வேலைக்கு போனால் அங்க வேறு பிரச்சினை இருக்கும் சரி விடுங்க இதுகளை கதைச்சா தலை வெடிக்கும் , உண்மைதான்டா தம்பி ஆனால் , ஆனால் என்ன அண்ணே சொல்லுங்க நீங்க எதோ வேற பிரச்சினையை வைச்சு கதைப்பது போல இருக்கு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்க நான் கேட்கமாட்டான் நேரம் ஆகுது வீட்டுக்கு போங்க அக்கா பார்த்துக்கொண்டு இருப்பா ....

உனக்கு சொல்லுறதில என்னடா இருக்கு நீ எனக்கு ஒரு சகோதரம் போல ,இல்லை எங்கட மூத்த அக்காவின் பிள்ளைகளை இவன் தம்பி ரவி தான் இவ்வளவு காலமும் பார்த்தவன் ,

ஓம், ஓம் எனக்கு தெரியும்.... நீங்கதானே அவரை இங்க கூப்பிட்டு விட்டது

ம்ம் அவனும் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில இருந்திட்டு வெளியில வரும்போது வயதி முப்பது தாண்டி போட்டுது ,நானும் எவ்வளவு காலம் பார்க்கிறது பிள்ளைகள் வளர வளர தேவைகள் கூடுது அதனால தான் அவனை கடன்பட்டு கூப்பிட்டு விட்டன் ,வந்தவன் எனக்கு காசு தரவேணாம் நீ மூத்த அக்காவின் பிள்ளைகள் மூன்றையும் வளர்த்து விடு என்று நான் சொல்லி போட்டு விடுட்டுடன் அவனும் சரி அண்ணை என்று இவ்வளவு காலம் பார்த்தவன் ....

கடைசி பெடியன் பிறந்து பத்தாம் நாள் அத்தான் கிபீர் அடிச்சு செத்து போனார் ,அந்த மூன்று பிள்ளையும் அவள் வளர்க்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ,நான் இங்க இருந்து காசு கொடுத்து விட்டாலும் அது போயிட்டா கொடுத்து விட்ட ஆள் கொண்டுபோய் கொடுத்து இருக்குமா என்று எல்லாம் இரவு பகல் எல்லாம் யோசிப்பன் ,உனக்கே தெரியும் அப்ப ஒரு தொடர்பும் இல்லை வன்னிக்கு கதைக்க ...

உண்மைதான் அண்ணே போன் கதைக்க வேணும் என்றால் கூட முதல் இரண்டுநாள் வந்து சொல்லி அதுக்கு பிறகு போய் காத்திருந்து கதைக்க வேணும் ...

ம்ம் அப்படி தான் இருபது வருடத்தில் அக்காவோட இரண்டு தரன் தான் கதைச்சனான் எடா .. சரி அதை விடு ,இப்படி இவனுக்கும் வயது நாற்பது ஆகுது இனி எங்க கலியாணம் என்று அவனுக்கும் வெறுப்பு வந்திட்டு, பிறகு இல்லை கடைசி காலத்தில தனிச்சு போடுவான் என்று நான் தான் பிடிவாதம் பிடிச்சு, கலியாணம் பேசி ஊரில தெரிச்ச பிள்ளை தான் நாலு மாதம் முதல் இந்தியாவில போய் கட்டீட்டு வந்தவன் ..

ஓம் ஓம் ஒருக்கா படம் போனில காட்டின நினைவு இருக்கு இப்ப என்ன அவைக்குள்ள என்னமும் பிரச்சினையா ...

சீ சீ அவள் தங்கமான பிள்ளை ,பிரச்சினை என்ற அக்காவின் பெடி படிச்சவன் இனி குடும்பத்தை பார்ப்பான் ,வளர்த்திட்டான், வேலைக்கு போக தொடங்கிட்டான், என்னும் துணிவில தான் நான் சந்தோஷமா இருந்தான் ,பட்ட துன்பங்கள் துயருகள் எல்லாம் மறத்து, அடுத்தவள் பொம்பிளை பிள்ளை அதை அவன் கரை சேர்ப்பான் என்று இருக்க நேற்று அக்கா போன் பண்ணி அழுகிறா என்ன நடந்தது என்று நான் கலவர பட்டு பயந்து போனேன் ...

ஏன் அண்ணே என்னாச்சு ,ஏதாவது வாகனத்தில் அடிபட்டு போட்டானே பெடியன் ..

கோதாரி அப்படி போய் இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டுருப்பன் அந்த மூதேவி இப்ப தான் இருபத்தி ஒரு வயது அவையின் வீட்டில் இருந்து மூணாவது வீட்டில இருந்த ஒரு பெட்டைய கூட்டிக்கொண்டு ஓடிட்டாம் என்று சொல்லி முடிக்கும் போது .....

இவன் குடும்பத்தை பார்ப்பான் என்று நான் இருக்க ,இவன் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு போயிட்டான் என கண்களில் நீர் அணைக்கட்டில் நிறைவது போல முட்டி நிக்க கதையை சொல்லி முடித்தார்....

யோசிச்சு பார் அப்பு நானும் கடன் ,வந்த தம்பி உழைச்சு கொடுத்து, படிப்பித்து, வீடு கட்டி கொடுத்து,மோட்டார் சைக்கிள் முதல் கொண்டு வாங்கி கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை நாற்பது வயதில் தான் ஆரம்பிக்க போக இந்த நாய் இந்த வேலையை செய்து இருக்கு ...

விரும்புறது கலியாணம் கட்டுறது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சமாவது குடும்பத்தை யோசிச்சு பார்த்தியா ,தங்கச்சி இருக்கு தம்பி இருக்கு படிப்பிக்க வேணும் அம்மா இவ்வளவு காலம் விதைவையாக இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கி விட நாங்க இப்படி தெறிக்கும் வேலையை செய்யலாமா என்று ...

சரி அண்ணே அழவேணாம் அவன் பார்ப்பான் குடும்பத்தை மாமா ஆக்கள் எப்படி கஷ்டபட்டு தன்னை வளர்த்தவர்கள் என்று விளங்காமல் இருக்குமா ,சரி நீங்க அழாமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னும் ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னால் அவருக்கு வேறு என்னத்தை தான் கூற முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக