வியாழன், 9 ஜூலை, 2020

உயிர் பாசம்.

பனையோலை தடுக்கில் பிரண்டு படுக்க பக்கத்து செத்தையில் கீழ் வரிச்சு தடியில் குட்டி நாகம் தன் தலையை தேய்க்கரண்டி அளவு தூக்கி படம் எடுத்தார் அழகாக,என்ன தான் அவர் அழகாக இருத்தாலும் பாம்பு என்றால் வேர்க்காமல் இருக்குமா ஐயோ என அலறல் அடக்கமுன் அப்பாச்சி சின்ன தடியால் ஆளை தூக்கி போடா நாகதம்பிரானே இந்த பக்கமா என கோயில் உள்ள திசை நோக்கி ஆளை தூக்கி போட்டா...

எந்த உயிரையும் அடிச்சு கொல்லும் அளவுக்கு கிராமங்களில் மக்கள் மனம் இருப்பதில்லை எதோ வழிதவறி வந்திருக்கும் கலைச்சு விடு என்பதுதான் அவர்களின் ஆக கூடிய வன்முறை சொல்.

அதிலும் கோயிலுக்கு பக்கதில் வீடு இருத்தா பாம்புக்கு எல்லாம் தனி மரியாதை பிணைத்து ஆடும் சாரையும்,மூர்க்கனும் தடிகொண்டு போக முன்னம் கத்தி சத்தம் போட்டு அடிக்க கூடாது ஒன்று செத்தா மற்றது பழிவாங்கும் என்னும் கதையை சொல்லி அவைகளை பாதுகாத்து விடுவார்கள்,வெள்ளை துணி போட்டு எடுத்து பெட்டியில் வைச்சா காசு வரும் என்பதெல்லாம் வேறு கதை ...

எடுப்பாக திரியும் கோழிசேவல் நாலுவீட்டு வேலி தாண்டி வந்து கன்னி கோழியை கலைச்சு திரிவார்,பார் ஆளை கொண்டை பூவும் கலரும் மாப்பிளை கணக்கா என தன் வீட்டு சேவலாக இல்லாது விட்டாலும் அதை ரசிக்கும் மனம் முன்னோர்களிடம் கொட்டி கிடத்தது...

எப்பொழுதும் மாமி,அத்தை வீடுகள் போனால் மருமக்களுக்கு என தனி கவனிப்பு எல்லாம் இருக்கும் அங்க பெண் எடுக்குறமோ இல்லையோ நம்ம மருமகன் என சொல்லும் மாமியின் குரலில் இருக்கும் அந்த பாச உணர்வுக்கு மொழிகள் இல்லை சொல்ல..

எப்பொழுதும் சக மனிதன் உறவு என்பதற்கு அப்பால் சென்று மிருகங்கள் மீதும் அலாதியான அன்பை திகட்ட கொடுத்த அந்த காலம் இனி வருமா என்னும் மீள் நினைவுகளுடன் இன்று சிமாட் போனில் கலைச்சு கலைச்சு சுடுபடும் விளையாட்டை விளையாடும் பிள்ளையை பார்த்தபடி இருத்து யோசிக்க வேண்டிய நிலையில் வாழ்க்கை காற்றில் மிதக்கும் பலூன் ஆகி போகிறது திசைகள் இன்றி.

#ஒக்கட்டி

2 கருத்துகள்: