வியாழன், 9 ஜூலை, 2020

லுமாலா சைக்கில்காரி.

அந்த லுமாலா சைக்கிள் ஒரு மையில் தூரம் வரும் போது தெரிந்துவிடும் அவள் வருவது கிறீஸ் போடாத செயினின் சத்தமும் செயின் கவரில் தேய்க்கும் பெடலும் அதுக்கு சாட்சியாக இருக்கும்,கொஞ்சம் கிட்டவாக வந்து விலகி போகும்வரை அவள் சைக்கிள் மிதிப்பதை நிறுத்தியிருப்பாள் அதன் சத்தம் அவளுக்கு பிடித்திருத்தாலும் ரோட்டுக்கரையில் சும்மா நிண்டு மிலாந்தும் பெடியலுக்கு சிரிப்பை கொடுக்கும் போதாதற்கு அவளை ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்க்கவும் பண்ணும்...

தன் தொப்பியை நெற்றியின் கீழ்வரை இழுத்து விட்டு முன்சில்லை மட்டும் பார்த்தடி காற்றில் எழும் சட்டையை ஒருகையால் அழுத்தியபடி அவள் லாபகமாக வெட்டி ஓடும் அழகை மட்டும் எழுதினால் தனி பக்கம் வேணும் என்பதால் தவிர்த்து...

ஒவ்வெரு சனி,ஞாயிறும் ரீயூசனுக்கு அவள் வந்து போவது என்பது அந்த வீதியில் பலருக்கு நேரம் கணிக்க உதவியாக கூட இருத்திருக்கு கீச்சிட்டான் கிழக்க போயிட்டா மணி ஐந்து ஆகியிருக்கும் என்பது அந்த வீதியில் மில்லில் வேலை செய்யும் ஐயாக்கு கூட தெரியும்...

சைக்கிள் மட்டுதான் உறுதியற்று இருந்தது ஆனால் அவள் மனம் என்பது உறுதியாக இருந்தது படிக்கனும் ஓ/எல் எப்படியும் பாஸ் பண்ணனும் அதன் பின் எங்காவது ஒரு இடத்தில் வேலைக்கு போகலாம் எல்லாத்துக்கும் உதவும்,வருவாய்துறைக்கு சைக்கிள் டிக்கெட் கிழிக்கும் வேலைக்கு கூட ஓ/எல் சித்தி வேணும் என ரீயூசன் வாத்தி அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போகும்...

இந்த முறை ஊருக்கு போகும் போது அதே மில் ஐயாவிடன் பேசிட்டு இருக்கும் போது கீச்சிட்டான் மேற்க போகுது மணி ஐந்து என சிரிச்சார் அவள் தன் சூட்டி மோட்டார் சைக்கிளில் கோன் அடிச்சு சிரித்தபடி போனாள்,பதினைத்து வருடம் பின் பார்த்த முகம் அன்று தொப்பி மறைத்திருந்தது இன்று ஹெல்மெட் மறைத்திருக்கு அவளா ஐயா இவள் என ஆச்சரியமாக பார்த்து நின்றேன் ..

அப்ப ஐயா சொன்னார் அவள் தான் அந்த மக்கள் வங்கியின் முகாமையாளர் தம்பி என.👍

#ஒக்கட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக