வியாழன், 4 டிசம்பர், 2014

ஓடிப்போதல்.

ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல்
எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட எல்லோ ஓடிப்போனவன் என்று
சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டால் „ உனக்கு இப்ப இது முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு“ என்று கிழவி கலைக்கும் ..
பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது.
ஊரே ஒரே பரபரப்பு. இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறான். சரி அடிபாடு தொடங்க போகுது என்று எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓடி விடுப்பு பார்ப்பதுமா சனம் சமையல் ..வீட்டு வேலை எல்லாம் விட்டுட்டு இதே வேலையா திரிந்தார்கள்.
அட அப்படி என்னதான் நடக்குது என்று நானும் களத்தில இறங்கினன் .
விஷயம் இதுதான் .
இருவரும் கலியாணம் கட்டி ஓடிப்போயிட்டினமாம் என்று கதை காதில் விழுகுது.
ஓ, என்ரை நீண்டநாள் தேடல் எல்லோ இந்த ஓடிப்போதல் எப்படி என்று எப்படி முழுவிபரம் அறிவது என்று அடுத்த பிரச்சினை.
சரி முதல் கூட்டி கொண்டு போன அண்ணன் வீட்டுக்கு போய் விடுப்பு பார்ப்பம் என்று அங்க போனேன். திண்ணையில இருந்து ஆச்சி ஒருஆள் குரல் எடுத்து அழுகுது . „ஐயோ ஒன்றும் தெரியாத என்ர பெடிய கூட்டிட்டு போயிட்டாள், படுபாவி நல்லாவே இருக்க மாட்டாள்“ என்று கிழவி தான் சாபம் போடுது ..
ஆனா „கிழவி சும்மா இரணை எதுக்கு தீட்டி தீர்க்கிற „என்று பக்கத்தில இருந்து ஐயா ஒராள் சொல்லுறார் ..
அதுக்கு கிழவி „பாரடி மோளே தன்னுடைய சொந்தம் பந்தம் என்று அப்படி பேசுறான், இவன் இவனும் சேர்த்துதான் கூட்டி விட்டு இருக்கிறான் போல ..முதல் தந்தி அனுப்பு கொழும்பில உள்ள மூத்தவனுக்கு…… வரட்டும் அவன் வந்தால் தான் எல்லாம் சரிவரும் எல்லோரையும் வெட்டி போடுவான் ..“
„ஐயோ என்ற ஒரேஒரு குஞ்சு பொத்தி பொத்தி வளர்த்தேன் என்ன மாயம் மந்திரம் செய்து கொண்டு போனாளோ, ஆத்தையும் மகளுமா சேர்த்து வசியம் வைத்து இருப்பாளுகள் ..அடிக்கடி அவள் இங்கின கோயிலுக்கு வரும்போதே எனக்கு தெரியும் என்னவோ நடக்க போகுது என்று.. நான் தான் கொஞ்சம் அலட்சியமா இருந்திட்டன் போல“ என்று தலையில் அடித்து அழுதா அந்த வீட்டுக்கார அம்மா
..என்னடா இது கொடுமை கலியாணம் தானே நடந்தது எதுக்கு இப்படி ஒப்பாரி என்று எனக்கு ஒரே குழப்பம் ..
இன்னொரு அக்கா வேகமா வந்தா. „அவன் பந்து விளையாடி போட்டு தம்பியாரோட அங்க போய் இருக்கிறான் அப்பத்தான் அவளுகள் எதோ தேத்தண்ணியில் எதோ போட்டு கொடுத்து இருக்கிராளுகள் ஆச்சி“ அவ்வளவுதான் சும்மா இருந்த கிழவி „எனக்கு தெரியும் எனக்கு தெரியும் அவன் லேசில எடுபட மாட்டான் என்னவோ செய்துதான் கொண்டு போயிட்டாளுகள்“ என்று மீண்டும் தொடங்கிட்டுது.
அட இப்படி மாறி மாறி அழுதண்டு இருக்குதுக நாம இதுல நிண்டு ஒரு பிரயோசனமும் இல்லை என்னும் ஒரு முடிவுடன், கிளம்பி அந்த கலியாணம் கட்டின அக்கா வீட்டுக்கு போனேன்.
பக்கத்தில் தான் ஒரே வட்டாரம் ஒரு கிலோமீட்டர் தூரம் தான் . அங்க போய் சேர்த்தா ஒரு நாலுபேர் கூடி இருந்து „வரட்டும் வரட்டும் யாரு வருவீனம் என்று பார்ப்பம்.. டேய் அந்த அலவாங்கை எடுத்து தாவாரத்தில் வை ,கோடாலி பிடியை களட்டி பிறம்பா வை ,சிலவேளை மேற்கில இருக்கிற மாமன் வருவார் அவர் கொஞ்சம் சண்டித்தன பார்ட்டி ஆ.. ஊ என்றால் போட்டு பிடிச்சு அனுப்புவம் ...
இப்படி பொண்ணு வீட்டில ஒரே வன்முறை கதையா இருக்கு
சரி நான் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறான் பாருங்கோ. .நமக்கு சின்னனில் இருந்தே சண்டை படம் பார்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் இங்க வேற அதுதான் நடக்க போகுது என்று உள்ளுக்குள்ள குதூகலிப்பு .
அட இந்த மாப்பிளை பொண்ணு எங்க என்று தேடிபார்த்தேன். இந்த ஓடிப்போதல் விஷயம் என்ன என்று கேட்பம் என்று ஆக்களை காணவில்லை.
சிறிய குடில் வீடு முன்னுக்கு திண்ணையுடன் சேர்த்து ஒரு வரவேற்ப்பு இடம் உள்ள ஒரு அறை. அது நாலுபக்கமும் கிடுகு கொண்டு அமைக்கபட்ட தட்டி ,போறவன் வாறவன் எல்லாம் அந்த தட்டியை பிரிச்சு உள்ளார எட்டி பார்க்கிறான். புது மாப்பிளை பொண்ணு அங்கதான் இருக்கினமாம் என்று ,சரி நானும் ஓடிப்போய் ஒரு இடைவெளியை பிடிச்சு எட்டி பார்த்தேன் .
இருவரும் இருக்கினம் அந்த அண்ணை அழுதுகிட்டு இருக்கிறார். பாவம் அப்பாவிதான் என்று, இப்ப விளங்குது அந்த கிழவி அழுதது போல ஒன்னும் தெரியாத ஆள் போல்தான் இருக்கிறார். அந்த அக்கா எதோ நாடியை பிடிச்சு எதோ சொல்ல தலை ஆட்டுறார் அவர் .. எனக்கு பின்னால வந்து அப்பத்தா ஒண்ணு போட்டா „எங்க நிக்கிற நான் இந்த உலகம் எல்லாம் தேடிக்கொண்டு வாறன் இங்க வந்து வாய் பார்த்துக்கொண்டு நிக்கிற ஓடுடா வீட்ட என்று கிழவி தடி முறிக்குது எட்டி பூவரசில ..
அடசீ சண்டை எல்லாம் நடக்க போகுது என்று நான் இருக்க கிழவி குழப்பி போட்டுது என்று ஒரு எட்டில எட்டி கடப்பல பாய்ந்து போவம் என்று ஓட பழைய ஆமைக்கார் ஒன்று வந்து நிக்குது படலையில ,இந்தா பெரியவன் வந்திட்டான் என்று எல்லோரும் படலைக்கு ஓடி வர நானும் ஆக்களோட ஆக்களா கலந்து உள்ளோ போனேன்.
நம்ம அப்பத்தாவும் அங்கின நிண்டுட்டா . அந்த கலியாணம் கட்டின அக்கா வந்து காலில விழுந்து அண்ணே சேர்த்து வையுங்க என்று காலை பிடிச்சு அழுகுது. அந்த அண்ணை அப்படியே ஒரு பார்வை பார்த்திட்டு ,சரி அழாத அதுதான் அண்ணன் வந்திட்டன் எல்லோ எழும்பு என்று ஒரு அதட்டு அதட்டி கூட்டி போனார் .
பிறகு என்ன கொஞ்சநேரம் மந்திர ஆலோசனை ..சரி நான் மட்டும் போறன் அங்க போய் கதைச்சுபோட்டு வாறன் என்ன சொல்லினம் என்று கேட்டுட்டு அடுத்த முடிவை எடுப்பம் என்று சொல்ல ,இல்லை இல்லை தனிய போகவேணாம் அவன் மாமன் ஆராவது வந்து நிண்டால் பிரச்சினை அடிதடியா போயிடும் என்று பொண்ணின் அம்மா மறிக்க, எங்க அப்பத்தா „அடி போடி அதுகள் நல்ல குடும்பம் அப்படி ஒன்றும் செய்யாதுகள் நீ நடவடா மகனே நானும் வாறன்“ என்று சொன்னா .
பிறகு என்ன எங்க அப்பத்தாக்கு கொஞ்ச பயம் இருக்கு ஊரில .அவாக்கு ஐந்து ஆண்பிள்ளை மனுசிக்கு ஒன்று என்றால் அங்க ஒருவன் மிஞ்ச முடியாது.
அதால இந்த சின்ன லொட்டு லோடுக்கு பஞ்சாயத்து எல்லாம் அப்பத்தா செய்வா . சரி கிழவி கூட்டிட்டு போனா நானும் மசுந்தி மசுந்து பின்னாடி போனேன். அங்க படலையை திறந்து போனது தான் காணும்.
எல்லோரும் அந்தா வாறான் மாப்பிளையை கொண்டுபோய் வீட்டில வைச்சுட்டு என்ன மூஞ்சியை கொண்டு வாறன் என்று அங்க உள்ள கிழவி கோஷம் போடுது ..
உடனம் எங்க அப்பத்தா „சரி சரி கொஞ்சம் சும்மா இரு சின்னன் சிறுசுகள் எதோ காதல் பண்ணி ஓடிபோட்டுதுகள் அதுக்கு இப்ப என்ன கள்ளன் ...காடன்கூடவா போனதுகள் இல்லையே ஒரு இனம் சனம் பின்ன எதுக்கு சும்மா கர.. கர என்று கொண்டு இருக்கிற ,இனி ஆகுற வேலையை பார்க்காமல் பழைய கதைகளை கதைச்சுக்கொண்டு… என்னடா நீ என்ன சொல்லுற.. இந்தா பொண்ணின் அண்ணன் வந்து நிக்கிறான் பேசுறதை பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ..
கொஞ்சம் நேரம் மவுனம். பிறகு பொடியனின் தாய் கதையை தொடங்கினா அவன் ஒரு மகன் நான் பெரிசா கலியாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டனான் மற்றும்படி ஒன்றும் இல்லை நீங்க செய்வதை செய்தா சரி தம்பி ..
அப்பத்தா குறுக்கிட்டு,
„என்ன செய்யுறது அதையும் சொல்லு காசா ..நகையா வீடு காணியா எல்லாம் பேசி முடியுங்க பிறகு ஆளை ஆள் ஏமாற்றி போட்டினம் என்று ஊருக்க பேசிட்டு திரியாமல் „ இல்லை கிழவி அவனுக்கு எங்க சொத்து இருக்கு எங்களுக்கு ஒன்னும் வேணாம் பொண்ணின் அண்ணன் சொன்னார் „ சரி நாங்களே கலியாண செலவு எல்லாம் செய்கிறம் மற்றும்படி அவளுக்கு கொடுக்க வேண்டிய எல்லாம் கொடுத்து அனுப்புவம் ,வேற எதவது எதிர்பார்த்தா சொல்லுங்க செய்கிறம்“ என்றார் .
அடுத்த கிழமை நல்ல நாள் வந்து கை நனைச்சுட்டு போறம் பிறகு கலியாண நாள் வைப்பன் ...
அட பாவிகள் அடிபாடி சண்டை என்று எல்லாம் பெரிய பில்டாப்பு விட்டுட்டு இப்படி சும்மா பேச்சில முடிச்சு போயிட்டு என்னும் ஆதங்கம் நமக்கு எல்லாம் இந்த அப்பத்தா கிழவி சும்மா இருக்காமல் நாட்டாமை பண்ணிட்டு என்று மனதுக்குள் பேசிக்கொண்டு ஒருமாதிரி இந்த ஓடிப்போதல் என்பதுக்கு விளக்கம் பிடிச்சன் என்னும் சந்தோசம் மட்டும் எட்டி பார்க்குது ...
இதுக்குத்தான் ஊருக்க இரண்டு மூணு கிழவிகள் இருக்க வேணும் .
இப்படியான பிரச்சினைகளை சுமூகமா தீர்த்து வைக்க அனுபவம் வாழ்க்கைக்கு முக்கியம் ..
என்ன இருவர் விருப்பபட்டு வீட்டின் அனுமதி இல்லாமல் கலியாணம் கட்டினா அதுக்கு பெயர்தான். ஓடிப்போய் கட்டுவது என்று ஒரு பெரிய கண்டுபிடிப்புடன் வளர்த்த பின் நானும் ஓடிப்போனது வேறு கதை பாருங்கோ .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக