சனி, 24 செப்டம்பர், 2016

ஒரு நினைவு வந்தது.

இந்த படத்தை எதேற்சியாக பார்த்த போது ஒரு நினைவு வந்தது....
                                      தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக