வியாழன், 12 செப்டம்பர், 2013

வில்லியம் வாட்டர் பம்மும் விநாசியரும்.!

விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு.

ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒரு பயிர் நிக்கும். மண்ணெண்ணை தட்டுபாடு நிலவிய காலம் இரண்டு வாளி கொழுவி கைகளால் நீர் இறைத்து பயிர் செய்யும் அவரை பார்க்கும் போது கவலையா இருக்கும்.
மூனும் பெண்பிள்ளைகள் அப்பாக்கு உதவியா பள்ளி போட்டு வந்து புல்லு புடுங்குறது கிளி பார்ப்பது என பாட புத்தகம் ஒரு கையில் வைத்து படித்த படி இவர்கள் செய்யும் வேலைகள் அதிகம். அப்ப எல்லாம் நாங்க கலெக்டர் வேலை காலையில் எழும்பி மூஞ்சிய ஒரு தேய் தேய்த்து போட்டு சைக்கிள எடுத்து கவட்டில வைச்சா எங்க போறம் எண்டு எங்களுக்கே தெரியாது..போயிட்டு இருப்பம். அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..
ஆனால் விநாசியர் அப்படி இல்லை அதிகாலை எழும்பி பனி மூட்டம் தலைப்பாகை கட்டிய படி பன்டி வாற நேரம் என்று காணிய சுற்றி வருவார் ஒருநாள் வழமையா பள்ளிக்கூடம் போன பிள்ளை திருப்பி வரவில்லை. மூத்த மகளை காணம் தம்பி என்றபடி வந்தவர் தனது சைக்கிள் காற்று இல்லை சைக்கிளை ஒருக்கா தங்கோ பார்த்து வர என வாங்கி போனார். திரும்பி வந்து சோகமா பத்து பிள்ளைகள் ஒன்றா இயக்கத்துக்கு போனதாம் அதில் என்னுடைய பெண்ணுமாம் என்று வரும் கண்ணீரை துடைத்தபடி படுத்து இருந்து விட்டத்தை பார்த்த படி இருந்த எனக்கு அவரின் உரையாடல் காதில் என் உணர்வுகளை ரோஷ நரம்புகளை சுண்டி விட்டு போனது.

வெளியில் வர எனக்கே வெட்கமாகிட்டு நாம் என்ன செய்தோம் எம்மால் என் குடுமபத்துக்கு அல்லது நாட்டுக்கு என்ன பிரயோசனம் என யோசிக்கும்போது பூச்சியம். மனதில் ஓடிய நெருடலான விசயங்களை எண்ணிய படி முகத்தை கழுவி விட்டு வந்தது முற்றத்தில் நின்று பார்த்தால் விநாசியர் அந்த மன நிலையிலும் முளகாய் கன்றுக்கு தண்ணி இறைக்க குழாய் போட்டபடி. வழமையா அவரின் மூத்த மகளே அந்த வேலையை செய்வாள் இதுவரை நான் சும்மா தன்னும் என்ன எப்படி எண்டு எட்டி பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன அண்ணை வெயில் படத்தான் எழும்பிவியல் போல என என்னை நக்கல் பண்ணும் அவளும் இப்ப இல்லை என்கிற மன நிலையில் ஒரு உந்துதல் வர நான் விநாசியர் அருகில் போனேன்.

விடுங்கோ நான் இழுக்கிறன் என வாங்க அவர் சொன்னார் இல்லை தம்பி உமக்கு பழக்கம் இல்லை குழாய் கண்டில பட்டுட்டா மரம் ஒடிஞ்சு போடும் என்று. சரி என அவருடன் சேர்ந்து தூக்கி கொடுத்து விட்டு கிணற்றடிக்கு வந்து வாட்டர் பம்மை இழுக்க வேணும் என்று சொன்னார். ஓம் எண்டு அவரோட வந்தன். தம்பி நோஷால் ஊசியை குறை நான் இழுக்கும்போது சொக்கை விடு வில்லியம் பம்முக்கு அப்ப நல்ல மதிப்பு தம்பி 15 வருடம் மேல கிடக்கு நமக்கு சோறு போடுது எனக்கு இதுகும் ஒரு பிள்ளைமாதிரி.

சரி அதில போய் சின்னவள் வேல்மூடி சூடாக்கி வைத்து இருப்பால் எடுத்து வா.. பக்கத்தில ஒரு சின்ன சிங்கர் சூப்பி இருக்கும் அதை கவனமா கொண்டுவா.. நான் கிணத்துக்குள் குழாய் இறக்கிறன்... சரி என்று நானும் கிளம்பி போய் எடுத்து வந்து சேர அவரும் தனது வேலை முடிச்சு நின்றார். நான் இழுக்கிறன் வேல்மூடிய காபிறேட்டருக்கு நேர பிடிச்சு ஒரு துளி பெற்றோல் விடு, புகை எழும்பும்போது சொக்கை கையை விடு, சரியா கவனம் பெற்றோல் இவளவுதான் இருக்கு என்று சொல்லி இழுத்தார்..

என் மனதில இவளவுனாலும் என்ன எழும்பி குழாய் போட்டு பம்மை இழுக்குறது எல்லாம் ஒரு வேலையா என அசால்ட்ட நினைத்த எனக்கு அவருடன் சேர்ந்து செய்த ஒரு இரண்டு மணித்தியால வேலை நாக்கை தள்ளி நிண்டுது..இவளவு கடினம்..வில்லியம் ஓடினாதான் இந்தமாதம் யூரியா வாங்கலாம் மிளகாய் பழுக்கிற நேரம் என சொன்னபடி சிவனே என்று கடவுளையும் அழைத்தபடி இழுத்தார் ..ஒன்று இரண்டு என போய் ஆறு ஏழு தடவை இழுத்தும் வில்லியம் இயங்க வில்லை.. களைத்து போய் ஒருவாளி தண்ணி அள்ளி குடித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் நிக்க நான் கேட்டேன் நான் இழுக்கவா நீங்க பெற்றோல் காட்டுங்க என.. நானும் உள்ள பலம் எல்லாம் சேர்த்து இழுத்து முடியாமல் இருந்திட்டன்..

மனதின் ஒரு மூலையில் ஒரு கணம் இவளவு வேலையயும் இவர்கள் தனியத்தானே செய்தார்கள் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அப்பொழுதான் புரிஞ்சுது.. சந்தையில் மரக்கறியை எடுத்து வைத்துக்கொண்டு நக்கல் கதையும் நளின விலையும் கேட்கும் எமக்கு அதன் பின்னால் இருக்கும் வலிகள் புரிவது இல்லைதான்.. சரி செடி வாடுது இவள் சின்னவள் எப்ப பள்ளியால வருவாள் என தெரியாமல் இருக்கு என விநாசியர் ஒழுங்கையை எட்டி பார்த்தார்..


அவளும் சரியா வர என்ன அப்பா இன்னும் தண்ணி இறைக்க வில்லையா என கேட்டபடி கிணத்தடிக்கு வந்தாள்.. இல்லை அம்மா வில்லியம் ஓடுறான் இல்லை என்ன எண்டு பார் என்றபடி விநாசியர் சொல்ல அவனுக்கு நான் இரண்டு தட்டு தட்டுறன் பொறுங்கோ என அந்த சாவி என்று மகள் கேட்க எனக்கு தலை விறைச்சு போச்சு.. என்ன நடக்கு இங்க என நாங்க இரண்டு ஆம்பிளைகள் முடியாமல் நிக்கிறம் இவா எப்படி செய்ய போறா என எனக்குள் கேட்டபடி நிக்க..

விறு விறு என சாவியை எடுத்து பிழக்கை கழட்டி நெருப்பில போடுட்டு இருங்க அப்பா உடுப்பை மாற்றி வாறன் எண்டு போனாள் வந்து பிளக்கை தட்டி எடுத்து எதோ ஒரு கம்பியால அப்டி இப்டி தட்டி போட்டு சூட்டோட பூட்டிட்டு வயரை கொளுவிபோட்டு தள்ளுங்க அப்பா என்று விட்டு கயிறை சுற்று ஒரு இழுவை... வில்லியம் ஓலம் எடுத்து கத்த கம்பிலிங்க எடுத்து குழாய் இறுக்கி விடுங்கோ என்றபடி அசால்ட்டா ஓவரு கொமாண்டும் கொடுத்தபடி அவள் மண் வெட்டிய கையில் எடுக்கும் போது எனது மனநிலை குதிச்சிடு நீ கிணத்தில் என்பது போல இருந்துது...

என்ன ஒரு அனுபவ முதிர்ச்சி என யோசிச்சு கொண்டு இருக்க விநாசியர் என்ன தம்பி எப்படி அவளுக்கும் வில்லியத்துக்கும் ஒரு வயது அதுதான் அவளுக்கு அவனை பற்றி நல்ல தெரியும் என்று சொல்லி சிரித்த படி போக நாங்கள் வீரவசனம் வெட்டி பேச்சிலும் நாட்கள் கழித்தோம் ஒழிய உருப்படியா ஒரு வேலையும் செய்யவும் இல்லை பழகவும் இல்லை இன்றில இருந்து அதிகாலையில் எழுவது விநாசியர் உடன் தோட்டம் செய்ய பழகுவது மரக்கறி கொண்டுபோய் சந்தையில் கொடுப்பது இனி நான் தான் செய்ய வேணும் என்கிற உறுதியுடன் வில்லியம் பம்மை முறைத்து பார்த்த படி நகர்ந்து போனேன்..

என்னுள் ஆயிரம் மாற்றம் தெரிய தொடங்கியது வன்னி மனிதர்களை பக்குவபடுத்தியது அறிவாளிகள் ஆக்கியது சுய சிந்தனையை போர் சூழல் தூண்டியும் விட்டது எமக்கு நாமே என்கிற தத்துவத்தை சொல்லமல் சொல்லி போனது காலம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக