புதன், 25 செப்டம்பர், 2013

நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..!

வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்....

அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட் அடிக்கும் எண்ணங்களுடன் பாய்ந்து வரும் வாலிபர் அதிகம்.. பல காதல்கள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் இது.. போனவருடம் தொடங்கியவர்கள் இந்தவருடம் பிள்ளைக்கு மொட்டை போடவும் வந்து இருப்பார்... இப்படி இந்த இரவு திருவிழா கோயில்கள் முக்கியம் பெறும்...

அப்படி ஒரு அப்பாவி தனமா இடம்பெயர்ந்து வந்த புதிதில் வவுனிக்குளம் அருகில் இருந்த போது அந்த வீட்டுக்கார அண்ணை என்னை கூட்டி போனார்... அது எனக்கு ஒரு புது அனுபவம்... 500க்கு மேற்பட்ட கோழிகள் நூற்று கணக்கா ஆடு மாடு என நேத்திக்கு விட்டு கொண்டுவந்து கொடுக்கப்படும் அவைகள் விடியும் பொழுது ஏலத்தில் விடுவினம்... இதை வாங்கவேண்டு சந்தையில கோழி வியாபாரம் செய்கிறவ பூரா அங்க நிப்பினம்.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

எங்கபோய் பார்த்தாலும் திரும்புற இடம் எல்லாம் பெண் பிள்ளைகள்.. உள் ஊருக்குள்ள இருக்குற பிள்ளைகள் எல்லாம் இன்னைக்கு பார்த்தா தான் உண்டு.. அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காது வீடு.. தேடியெல்லாம் போய் பார்க்க முடியாது... அப்புறம் இடியன் கட்டு துவக்கு தான் பதில் சொல்லும் என்பதால் இப்படியான இடத்தில் காதலை சொல்ல முடிஞ்சா சொல்லி போடவேணும்.. விட்டா அடுத்த வருடம் தான்.. நம்ம பெடியளும் அப்படித்தான் தோட்டம் வயல் எண்டு திரியுறவங்கள் இப்படி ஒருநாளுக்கு வடிவா வெளிக்கிட்டு மாப்பிளை கோடன் சாரம் மாட்டின் சேட்டு அதில முன்னுக்கு ஒரு மையில் தாள் வைத்து கொண்டு வந்து நிப்பினம் அம்புட்டு அழகு... .

அதை விட நம்ம பெண்ணுங்க ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சாக்கரை மாதிரி.. எல்லோரையும் கண்டா ஒருநேரத்தில் யாரை பார்ப்பது எண்டு ஒரு குழப்பம்.. கோயிலுக்கு நேத்திக்கு விட்ட சேவல் கணக்கா அழகா தலை வாரி இழுத்து இரட்டை பின்னல் போட்டு ஒன்றை முன்னுக்கு விட்டு மற்றதை பின்னாடி போட்டு நெற்றியில் ஒரு திருநீற்று கீறுபோட்டு ஓரக்கண் பார்வையும் பார்த்து வருவினம்.. யாரு யாரு யாருடன் வந்து நிக்கினம் எண்டு எல்லா தகவலும் பார்வையில் எடுத்து போடுங்கள்.. அப்ப ஊரில பரிசியன் எண்டு ஒரு பவுடர் இருந்தது.. அதுதான் அங்க உள்ளதில் விலை கூடியது.. அதை எடுத்து அப்பி நல்லா பூசி வாற பெட்டையளுக்கு என்ன வெள்ளை அடிச்சு கிடக்கு எண்டு நம்ம பையனுகள் நக்கல் வேற.. .

இப்படி காவல்துறைக்கு தெரியாமல் கடிதம் கொடுத்து முடிவு கேட்பது ஒரு திறில்.. பகிடி கூட குறைய விட்டதை கண்டால் முடிஞ்சுது கதை.. கூட்டிட்டு போய் கொட்டிலில இருத்தி போடுவினம் என்ட பயம் வேற.. மணிக்கடை கச்சான் கடை அலுமினிய பாத்திரக்கடை பிளாஸ்டிக் கடை எண்டு எங்க எல்லாம் நமக்கு பிடிச்ச பிள்ளை போகுதோ அங்கு எல்லாம் போய் பின்னாடி நிண்டு விலை கேட்டுட்டு வாறது.. ஒரு சாமம் 2 மணி வரை நல்ல பம்பலா பகிடியா போகும்.. அப்புறம் அவன் அவன் அங்க அங்க சுருண்டு படுக்க தொடக்கி போடுவாங்கள்.. அப்ப சந்திரிகா புட் பாய் ஒன்று வந்தது பெரிய பாய் இருவர் வடிவா படுக்கலாம்.. அதில் ஒன்றை வாங்கி அதை நம்ம பெடியள் நாலுபேர் போட்டு படுப்பம்.. பாட்டு சத்தம் மேளசத்தம் காவடி ஆட்டம் மணியோசை அரோகரா ஆர்ப்பரிப்பு மத்தியில் வாற நித்திரை சொர்க்கம்...

எல்லாம் முடிஞ்சு விடிஞ்சுது என்றால் இரவு அழகான பிள்ளைகள் எல்லாம் இப்ப காளி வேஷம் போட்டு நிக்கும்.. நித்திரை துக்கம் கண்களில் வழிய போட்ட பவுடர் இல்லாமல் போக கனகா கனகம்மவா தெரிவா பார்வதி பார்வதிபிள்ளையா தெரிவா.. ஓடிப்போய் முகத்தை கழுவி கழுவி ஓரளவு செகப்பாகும் வரை பெடியளை திரும்பியும் பார்க்காதுவள்.. அப்படி வெட்கம் வரும்.. பவுடரை கொண்டுவந்து இருக்கலாம் பேப்பரில் சுற்றி என்று அப்பதான் நினைவு வரும் அவைக்கு... கோயிலில் வாங்கிய கண்ணாடியும் பொட்டும் உடனம் பாவிக்கும் ஆக்கள்..

அண்ணனுக்கு தெரியாமல் மெதுவா தங்கைச்சியை கழட்டி விட்டு கதைக்க வந்தா பெடியளோட சேர்ந்து நித்திரை கொண்டுட்டு இப்ப எழும்பி நிண்டு பார்க்கிறாயடி என்று எமக்கு சொல்வதை தன் தோழிக்கு சொல்லிகாட்டி கடந்து போகும் நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக