செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து..!

சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் .

தண்ணி எடுக்க வந்த அம்மா எங்கடா வாளி என்ன கனவு கானுறாய் என கேட்கும்போது தான் தெரிஞ்சுது வாளி போட்டுது எண்டு. பொறன எடுத்து தாறன் எதுக்கு கத்துறா என மறு மொழி பேசி கொக்கத்தடி எடுத்து வந்து கிணற்றில் விட்டு துலாவி ஒருவழியா வாளியை மீட்டு போட்டன். தண்ணியை அள்ளி அம்மாவின் பிளாஸ்ரிக் வாளியில் ஊற்றிகொண்டு இருக்க அம்மா சொன்னா இண்டைக்கு கச்சேரியில புது நிவாரண அட்டை கொடுக்கினம் என்னை கொண்டுபோய் அதில இறக்கிவிடு சைக்கிளில கெதியா வா சனம் வரமுதல் போகவேணும்... நான் ஓம் நீங்க வெளிக்கிடுங்க இப்ப வாறன் ஆனால் உள்ள வரமாட்டன் சரியா என்று கூறிக்கொண்டு முகத்தை கழுவ தொடங்கினான்..

இந்த குடும்ப அட்டை நிவாரணம் அப்படி ஆன இடத்துக்கு போறது நமக்கு வெட்கம். பெண்பிள்ளைகள் நிண்டா என்ன நினைக்கும்? நாங்க நிவாரணம் எடுத்து சாப்பிடுற குடுமபம் எண்டு ஒரு வரட்டு கௌரவம் தான். சரி என அம்மாவை ஏற்றி கொண்டு அங்க போனால் சரியான சனம். என்னடா இது... ஒரு ஐயா சொன்னார் தம்பி கலையில வந்து நம்பர் எடுத்தவைக்குதான் இண்டைக்கு கொடுப்பினமாம் மற்ற ஆக்களை நாளைக்கு காலையில வரட்டாம் எண்டு சரி எண்டு அடுத்தநாள் வேலைக்கு போய் நான் நம்பர் எடுத்திட்டு நிக்க அம்மா சுணங்கி வாறன் எண்டு சொன்னா நானும் 9 மணியாகும் எண்டு சைக்கில் கரியரில் ஏறி இருக்குறன் ...

அப்பொழுது ஒரு பிரமிப்பு. நான் அன்று பார்த்த அதே பெண்ணு தன்னுடைய தாயுடன் வாரா. உடனும் முகத்தை லேஞ்சி எடுத்து வடிவா துடைச்சுபோட்டு சேட்டு கொலரை ஒருக்கா சரிபண்ணி, பார்த்தும் பாராதது மாதிரி ஒரு பில்டப்பு கொடுத்து போட்டு இருக்க எனக்கு பக்கத்தில வந்து நிண்டு அவாவின் தாய் எப்ப நம்பர் கொடுப்பினம் என அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் விசாரிக்கிறா.. அந்த பெண் சொன்னா இண்டைக்கு கொடுத்து முடிஞ்சுது இனி நாளைக்குதான், ஒருநாளைக்கு 150 பேருக்குமட்டுமே நம்பர் கொடுக்கினம் என்றவுடன் அவளின் அம்மா ஐயோ அப்ப இண்டைக்குக்கு இல்லையா என்ன செய்ய என மிக வேதனையா தலையில் கைவைத்து புலம்ப நான் திரும்பி பார்த்தேன்.அந்த பிள்ளை சரி அம்மா பறுவாயில்லை நாளைக்கு வருவம் என்று சொல்லி சமாளிக்குது வெட்கபட்டு. ஆனா எப்படி பிள்ளை? நாளைக்கும் யாரு சைக்கிள் இரவல் தருவினம் நிவாரண அட்டை இல்லாட்டி நாளைக்கு எப்படி சங்கத்துக்கு போறது சமையல் சாப்பாடு என்ன அப்பாக்கு மருந்து வேற நாளைக்கு எடுக்க வேணும் என கொட்டி தீர்த்தார்..

தகப்பன் செல்லில் காயப்பட்டு நடக்க முடியாதாம் குடும்ப தலைவர் யாராவது அப்பா அல்லது அம்மா வந்தாத்தான் இங்க குடும்ப அட்டை கொடுப்பினம் என்கிற நிலைமை பிள்ளை பள்ளிக்கூடம் போகாமல் தாயை கூட்டி வந்து இருக்கு இனி நாளைக்கும் வரவேணும் பாவங்கள் உதவி இல்லை போல என பக்கத்தில் இருந்த அக்கா சொல்லிட்டு இருந்தா... மனசு ஓரம் ஒரு வலி என்ன செய்வம் நம்ம நிலைமையும் இதுதான்.. அம்மா வேற... வரப்போற நம்பரை கொடுப்பமா வேணாமா என இருமனம் போராடுது. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தன்.கொடுப்பம் நாளைக்கு வேளைக்கு வந்தா நான் திருப்பி எடுக்கலாம் தானே பாவங்கள் அழுதண்டு போறா.. உடனம் இறங்கி நடந்து போய் அம்மா நில்லுங்கோ நம்பர் கிடைக்க வில்லையா என வழி மறித்தேன்.. அவரும் ஓம் தம்பி நாங்க இருக்குறது சரியான தூரம் நாளைக்காம் என வேதனைய கூற நான் எனது நம்பரை கொடுத்தேன்.. இந்தாங்கோ எடுத்துக்கொண்டு போங்கோ நான் நாளைக்கு வந்து எடுப்பன் கிட்டதான் இருக்குறன் என.

தாயின் முகத்தில் ஆயிரம் சூரியன். மகள் ஏசுவது கூட தெரியாது வேறு எங்கோ பார்த்த படி.. யாருடைய பிள்ளையோ நீ நல்லா இருதம்பி என என்னை வாழ்த்தி நகர ஏதோ பெரிய ஒரு தியாகம் செய்த நினைப்பில் நான் மிதக்க அம்மா எதிரில்.. என்னடா இங்க நிக்கிறா எத்தினையாவது நம்பர்?? உடைஞ்சுது கனவு...இல்லை வந்தனான் சரியான சனம் எல்லாம் குறுக்க மறுக்க நிண்டு இடையால வாங்கிட்டு போகுதுகள் எனக்கு நமபர் கிடைக்க வில்லை நாளைக்கு பார்ப்பம் வா போவம் எண்டு சொல்ல எருமை விடிய வந்து ஒரு நம்பர் எடுக்காமல் எங்க பார்த்தண்டு நிண்டனி என வழமையான பூசை நடக்க சனம் பார்க்குது.. பேசாமல் வானை எண்டு அம்மாவை அதட்டிக் கொண்டு வர பின்னாடி ஒரு குரல்.. ஏய் மங்கை எண்டு அம்மாவும் நானும் ஒருசேர திரும்பி பார்க்க நம்பர் கொடுத்த அந்த அம்மா திகைச்சு போய் நான் நிக்க மங்கை எப்படி இருக்கிறா? இங்கினியா இருக்கிறா? யாரது இது உண்ட பெடியா என கேள்விகள் நீளுது .
அம்மாவும் லட்சுமி என இருவரும் கட்டி அணைத்து பரவச பட ஒன்னும் புரியாமல் நான் நிக்க அந்த பிள்ளைவேற நம்மளை கடைக்கண்ணால பார்க்க நமக்கு வெட்கம் வேற வர அந்த பீலிங்கை சொல்ல முடியாது.. பின்னர் அம்மா சொன்னா அப்பாவின் உறவுக்காரர் உனக்கு மாமி முறை எண்டு.. அம்மா கூற நமக்கு மனசில ஓடுது நீங்க சொல்லாட்டியும் எனக்கு மாமி முறைதான் என. 90இல் இடம் பெயர்ந்த பிறகு தொடர்பு இல்லை 15 வருடத்துக்கு மேல ஆச்சு இப்பதான் காணுறம் எண்டு பழைய கதை புதுக்கதை எல்லாம் பேசி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டுபோங்க பக்கத்தில்தான் எண்டு அம்மா அழைக்க; மகளா இவள் என எங்க அம்மா அருகில் கூப்பிட்டு கட்டியணைத்து முத்தம் இட்டு அப்படியே பேத்தியார் மாதிரி என்று சொல்லி ஆரதழுவி நின்றா ..நமக்கு இங்க முக்காவாசி கலியாணம் முடிஞ்சுது.

பின்னர் அம்மா சொன்னா நீ நிண்டு கூட்டி வா நான் போறான் எண்டு. பாலுக்கு பூனையை காவலுக்கு விட்டுட்டு போறா அம்மா.. நானும் தலையாட்டி நின்று உறவு கொண்டாடி போட்டு போக நீண்டநேர மவுனம் கலைத்து பேச தொடங்கினேன். உங்கட பெயர் என்ன எப்ப பிறந்தனீர் என்ன படிக்கிரீர் எங்க படிக்கிரீர் என கேள்விகள் மட்டுமே கேட்டபடி நான் இருக்க அவள் நீங்க வேலைக்கு போறிங்களா படிக்கிறிங்களா எண்டு ஒருகேள்வி நாம வாயை ஆப் பண்ணிட்டு. சரி அம்மா வாறா போவம் வாங்கோ எண்டு கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டன். நாங்க வெட்டி என்பதை எப்படி சொல்லமுடியும்?? நீங்களே சொல்லுங்க மக்களே எண்டு மனதில் நினைத்த படி சைக்கிளை எடுத்தேன். பின்னர் என்ன மாமிவீடு என்ன வேலை எண்டாலும் நாமதான் முன்னுக்கு நிப்பம். பகிடி நக்கல் என செம ஜாலியா போனது வாழ்க்கை. மீண்டும் ஒரு இடம்பெயர்வு நாம் வெளியேற அவள் எங்கு போனால் எண்டு இன்றுவரை தெரியாமல் நான் தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக