ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பர்வதத்தின் சிவலையன் .!

பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார்.

சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்...

அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு.

வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு .

அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்...

சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை.

அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு .

சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக